

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் பள்ளி மாணவர்கள் நேற்று காஞ்சனகிரி மலையில் விதை பந்துகளை வீசினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல் நிலைப்பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லாலாப்பேட்டை அடுத்த காஞ்சனகிரி மலை பகுதியில் மாணவர்கள் மூலமாக விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்செல்வன் தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரி யர் கருணாநிதி முன்னிலை வகித் தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா பங்கேற்று, காஞ்சனகிரி மலையில் மாணவர் களுடன் சேர்ந்து விதை பந்துகளை வீசி, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், வேப்பம், புங்கன், அரசமரம், புளியமரம், சப்போட்டா உட்பட பல்வேறு வகையான மரங்களின் விதைகள் அடங்கிய 38 ஆயிரம் விதைப் பந்துகள் வீசப்பட்டன.
இதில், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் அற்புத ராஜ், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) மணி, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆண்டி, இளையராஜா உட்பட பலரும் பங்கேற்றனர். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு, பேரிடர் மேலாண்மை, ரத்த தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.