Last Updated : 16 Dec, 2017 10:10 AM

 

Published : 16 Dec 2017 10:10 AM
Last Updated : 16 Dec 2017 10:10 AM

விவசாயம் 2.0!

 

வி

வசாயத்தை மனிதர்கள் பார்த்த காலம் போய், வேளாண் கருவிகளும் டிராக்டர்களும் அதைச் செய்ய வந்தன. இது 2.0 காலமல்லவா? அதனால், வேளாண் கருவிகளுக்கும் டிராக்டருக்கும் மாற்றாக விவசாயத்தைப் பார்க்க இன்று ரோபோவும் வந்துவிட்டது. ஆம், இது விவசாயம் 2.0!

அப்படி ஒரு ரோபோவை உருவாக்கியிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பாலாஜி. அந்த ரோபோவின் பெயர் ‘மல்டி பர்பஸ் அக்ரிகல்சர் ரோபோ வெகிகிள்!’

ரோபோட் தந்த ஆர்வம்

விவசாயத்தில் மனிதர்கள் என்ன வேலைகளையெல்லாம் செய்கிறார்களோ, அந்த வேலைகளையெல்லாம் இந்த ரோபோவும் செய்யும் என்கிறார் பாலாஜி. “விவசாயம் செய்வதில் இந்த ரோபோ, ‘ஒன் மேன் விவசாயி’யாக வலம்வரப் போகிறது. எனக்குப் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை. சின்ன வயதிலிருந்தே பெரிய பெரிய கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றை மினியேச்சர்களாகச் செய்வதிலும், விதவிதமான ரோபோக்களை உருவாக்குவதிலும் எனக்கு ரொம்ப ஆர்வம். பொறியியலில் மெக்கானிக்கல் முடித்துவிட்டு, ரோபோ மீதான ஆர்வத்தால் எம்.டெக். ரோபோடிக்ஸ் படிப்பை முடித்தேன்” என்கிறார் அவர். இன்று நேர்த்தியான விவசாய ரோபோட்டை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

இந்த விவசாய ரோபோட் எப்படிச் செயல்படும்?

“இந்த விவசாய ரோபோட்டை வீட்டிலிருந்தபடியே இயக்கலாம். வயல்வெளியைக் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவைப் பொருத்தி, வீட்டில் உள்ள இணையத்தில் அதை இணைத்தாலே போதும். நிலத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதற்கேற்ப ரோபோட்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஸ்மார்ட்போன் வழியாகவும் ரோபோட்டை விவசாய வேலையைச் செய்ய வைக்கலாம். நிலத்தை உழுவதில் தொடங்கி நாற்று நடுவது, களை பறிப்பது, பூச்சிக்கொல்லி தெளிப்பதுவரை எல்லா வேலையையும் இந்த ரோபோட் செய்து முடித்துவிடும். ஒரு விவசாயி ஒரு நாளில் செய்யும் வேலையை இது ஒரு சில மணி நேரத்தில் செய்து முடித்துவிடும்” என்கிறார் பாலாஜி.

2.5 லட்சம் ரூபாய்!

கிராமத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இணையம், சி.சி.டி.வி., ரோபோட்டிக்ஸ் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரிப்பட்டு வரும் என்று கேட்டால், ‘இது சென்ற தலைமுறை விவசாயிகளுக்கானது அல்ல’ என்று உடனடியாகப் பதிலளிக்கிறார் பாலாஜி.

16chnvk_robot2.jpg பாலாஜி right

“நான் கிராமத்திலிருந்து வந்தவன்தான். விவசாயிகளின் வீட்டில் இருக்கும் இந்தத் தலைமுறையினர் யாரும் பெரிதாக விவசாயத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. வேறு வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். அவர்களுக்கான ரோபோட்தான் இது.

காலம் காலமாக அவர்கள் செய்துவந்த விவசாயத்தை அவர்கள் கைவிடாமல் இருக்க இந்தப் புதிய வடிவிலான ரோபோட் அவர்களுக்கு உதவும். இந்தக் கால இளைஞர்கள் விரும்பும் வகையில், அவர்கள் பாணியில் வேலை செய்யும் வகையில்தான் ரோபோட்டை வடிவமைத்தேன்” என்கிறார் பாலாஜி.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச ரோபோட் ஆய்வுக் கருத்தரங்கில், இந்த ரோபோட் பற்றிய ஆய்வுக் கட்டுரையைச் சில மாதங்களுக்கு முன்பு சமர்ப்பித்திருந்தார் பாலாஜி. இந்த ரோபோட் சர்வதேசப் பார்வையாளர்கள் பலரையும் கவனத்தில் ஈர்த்தது. ஆய்வுக் கட்டுரைக்கான முதல் பரிசையும் இந்த ரோபோட் வென்றது.

“தற்போது ரோபோட்டைத் தயாரித்துச் சந்தைக்குக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருக்கிறேன். விரைவில் விவசாய ரோபோட் சந்தைக்கு வந்துவிடும். இதன் விலை இரண்டரை லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கும். போகப்போக விலை குறையும்” என்கிறார் பாலாஜி.

வாங்க விவசாய எந்திரன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x