

உதகை: நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் நீலகிரி வனக்கோட்ட எல்லையிலுள்ள சின்னகுன்னூர் பகுதியில் புலி குட்டிகள் நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து உடனடியாக ஒரு குழுவினர் விரைந்து சென்று, அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். அப்போது, 4 புலி குட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதே பகுதியில் கடந்த மாதம் பெண் புலியை விவசாயிகள் பார்த்துள்ளனர். தாய் அருகில் இருக்கும் என்பதால், குட்டிகளை கண்காணிக்க குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது. குட்டிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
கடந்த 17-ம் தேதி புலி குட்டி இறந்துகிடந்ததை குழுவினர் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் கோட்டத்தை சேர்ந்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மற்ற குட்டிகள் மற்றும் தாயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்பகுதியில், 18-ம் தேதி கடமான் உடலை தேடுதல் குழுவினர் கண்டுபிடித்தனர். புலியால் மான் வேட்டையாடப்பட்டிருக்கும் என்பதால், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இந்நிலையில், அப்பகுதியில் ஒரு புலி குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இரண்டு குட்டிகள் இறந்துகிடந்தன.
உயிருடன் உள்ள புலி குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த இரண்டு குட்டிகளின் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலி குட்டிகள் எவ்வாறு இறந்தன என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி வன அலுவலர் கௌதம் கூறும்போது, "சின்ன குன்னூர் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன்பேரில் அப்பகுதியை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். இன்று ஒரு புலி குட்டியை மீட்டனர். மற்ற 2 குட்டிகள் இறந்துகிடந்தன. வன கால்நடை மருத்துவர் புலி குட்டிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நெறிமுறைப்படி, இறந்த குட்டிகளுக்கு பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த புலி குட்டியும் நேற்று உயிரிழந்தது. இதையடுத்து 4 புலி குட்டிகள் இறந்தது குறித்து வனத்துறை யினர் விசாரிக்கின்றனர்.