மாஞ்சோலை எஸ்டேட்டில் புகுந்த அரிசி கொம்பன் யானை: வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு

மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் அரிசிகொம்பன் யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள்.
மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் அரிசிகொம்பன் யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள்.
Updated on
1 min read

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நாலுமுக்கு எஸ்டேட்டில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய அரிசிகொம்பன் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதப்படுத்திய அரிசிகொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப் பகுதியான மேல் கோதையாறு அணை அருகே கொண்டுவிட்டனர். அரிசிகொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை அருகே நாலுமுக்கு வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை புகுந்தது. நாலுமுக்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. ஆள் இல்லாத வீட்டின் கதவையும் சேதப்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் யானை நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, நாலுமுக்கு பகுதியில் திரிந்து கொண்டிருப்பது அரிசிகொம்பன் யானைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரிசிகொம்பன் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக ப்ரியா கூறும்போது, “நாலுமுக்கு பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிசிகொம்பன் யானை அங்கு இருந்த வாழைகளை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாலுமுக்கு- ஊத்து பகுதிக்கு இடையே வனப்பகுதியில் சுற்றித் திரிகிறது. யானையால் பெரிய சேதம் எதுவும் இல்லை. தொடர்ந்து அரிசிகொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்” என்றார்.

இதற்கிடையே, அரிசிகொம்பன் யானை நடமாட்டம் காரணமாக மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, காக்காச்சி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in