தூர் வாரப்படாததால் நீர் தாவரங்கள் ஆக்கிரமிப்பு: குமரியில் அழியும் நிலையில் 1,200 குளங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக  தூர் வாராததால் நீர்தாவரங்கள்  வளர்ந்து ஆக்கிரமித்துள்ள கடப்பாண்டிகுளம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக தூர் வாராததால் நீர்தாவரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள கடப்பாண்டிகுளம்.
Updated on
2 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன குளங்களை 20 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராததால் நீ ர்தாவரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொள்ளளவு குறைந்துள்ளது. 1,200-க்கும் மேற்பட்ட குளங்கள் அடையாளம் தெரியாமல் அழியும் நிலையில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீராதார கட்டுப்பாட்டில் 2,040 பாசனகுளங்கள் உள்ளன.

தனியார் மற்றும் அற நிலையத்துறைக்கு சொந்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீரால் நிரம்பும் குளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. குமரியில் 3,000 ஹெக்டேருக்கு மேல் நடைபெறும் நெல் விவசாயம் குளத்து பாசனத்தை நம்பியே உள்ளது.

நடப்பாண்டு பருவமழை பொய்த்த நிலையில் பாசன குளங்களில் உள்ள நீர்தான் கன்னிப்பூ சாகுபடிக்கு கைகொடுத்தது. ஆனால் பாசன குளங்களை நீண்ட காலமாக தூர் வாராததால் நீரை தேக்கும் திறன் நான்கில் ஒரு பகுதியாக சுருங்கியுள்ளது. நீர்தாவரங்கள் மற்றும் சமூக விரோதிகளால் குளங்கள் ஆக்கிரமிப்பு, குளங்களுக்கு வரும் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டவை ஆகியவையே இதற்கு காரணம்.

பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாராததால் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இதுகுறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குரல் கொடுத்தும் இதுவரை முறையான நடவடிக்கைஇல்லை என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்துமே பராமரிப்பற்ற நிலையில் உள்ளன. தூர் வாராதது, சேதமடைந்த மடைகளை சீரமைக்காதது உள்ளிட்ட காரணங்களால் நீரை தேக்கும் திறன் குறைந்து விட்டது. அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் செல்வந்தர்கள் பலரும் குளத்தை ஆக்கிரமித்து தங்கள் நிலங்களோடு சேர்த்து பட்டா பெற்றுள்ளனர்.

இதற்கு பல அதிகாரிகள் துணை போயுள்ளனர். தக்கலை அருகே வடக்கு பேயன்குழி பகுதியில் உள்ள கடப்பாண்டிகுளம் நீரை தேக்கும் வசதியின்றி உள்ளது. கண்டன்விளை கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் இக்குளத்துக்கு வரும் 2-வது மதகு அடைபட்ட நிலையில் மிகவும் சிரமப்பட்டு நீரை குளத்துக்கு இப்பகுதி மக்கள் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தண்ணீரின் மேற்பரப்பே தெரியாத அளவுக்கு குளத்தில் நீர் வாழ் தாவரங்கள் ஆக்கிரமித்துவளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவல நிலையில் இக்குளம் உள்ளது. குளத்தின் பக்கச் சுவர்கள் ஆங்காங்கே இடிந்துள்ளது. இதனால் விவசாயத்துக்கு போதிய நீரை குளத்தில் தேக்க முடியவில்லை.

மேலும் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறும் அபாயமும் உள்ளது பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், விவசாய தேவைக்கும், நீர் ஆதாரத்துக்கும் முக்கிய பங்காற்றி வரும் கடப்பாண்டி குளத்தின் கரையை பலப்படுத்தி சீரமைப்பதோடு , மாசுபாட்டுக்கு வழி வகுக்கும் செடிகளை அகற்ற வேண்டும். இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களை தூர்வாரி அழிவிலிருந்து மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in