பருவமழை பொய்த்ததால் வறண்டுபோன நீராதாரங்கள்: உடுமலை பகுதி விவசாயிகள் கவலை

உடுமலை சுற்றுப் பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் செங்குளம் படம். எம்.நாகராஜன்
உடுமலை சுற்றுப் பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் செங்குளம் படம். எம்.நாகராஜன்
Updated on
1 min read

உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்து, முக்கிய நீராதாரங்கள் வறண்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதில் திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசனத் திட்டத்துடன் இணைந்த 7 பாசனக் குளங்கள் உள்ளன.

அதன் மூலம் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 4-ம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் மட்டுமே கொடுக்க முடியும் என்ற நிலையில் தொகுப்பணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது.

பிஏபி திட்டத்தின் மூலம் பெரியகுளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வளையபாளையம் உட்பட 7 குளங்களும் பயன்பெற்று வருகின்றன. இந்த குளங்கள் மழைக் காலத்தில் சிற்றோடைகள் மூலம்கிடைக்கும் மழைநீரால் நிரம்புவது வழக்கம். திருமூர்த்தி அணையில் திறக்கப்படும் உபரி நீர் மூல மும்,மேற்படி குளங்கள் நிரம்பும்.

கடந்த சில மாதங்களாக தென் மேற்கு பருவமழை பெய்யாததால், 7 குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. இதில் 404 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தில் மட்டும் ஓரளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அதனால் இக்குளங்களை நம்பி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து பொதுப் பணித்துறையினர் கூறும்போது, ‘‘நடப்பாண்டு பிஏபி திட்டத்தில் குளங்களுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதான கால்வாயில் 4-ம் மண்டல பாசன விவசாயிகளுக்காக இம்மாத இறுதியில் ஒரு சுற்றுக்கு மட்டும் தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in