

உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் பல கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கி, விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
உடுமலை கோட்ட அளவில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. பெரும்பகுதி திருமூர்த்திஅணை மற்றும் அமராவதி அணையால் பாசனம் பெறும் பகுதிகளிலும், சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறாத பகுதிகளிலும் அமைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் விவசாயிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை பெய்யாததாலும், கடும் வெயிலின் காரணமாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தென்னை மரங்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
இதுகுறித்து உடுமலை அடுத்த தீபாலப்பட்டியை சேர்ந்த தென்னை விவசாயி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கிணற்று நீரைக் கொண்டு தென்னை மரங்கள் வளர்த்து வருகிறேன். மழை இல்லாததால் நீரின்றி கிணறு வற்றியது. நிலத்தடி நீர் மட்டமும்அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
எங்கள் நிலம், திருமூர்த்தி அணையில் இருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அரை கி.மீ. தொலைவில் பிஏபி பிரதான வாய்க்கால் இருந்தாலும், அதில் பாசனம் பெறும் உரிமை எங்களுக்கு இல்லை. கடந்த சில மாதங்களாகவே தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது வறட்சி காரணமாக 10 நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்ச்ச வேண்டியுள்ளது.
தீபாலப்பட்டி, ஜில்லேபிநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், ரெட்டிபாளையம், பொன்னாலம்மன் சோலை, ராவணாபுரம், கரட்டூர் உட்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் இதேநிலைதான் நீடிக்கிறது. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும், என்றார்