

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வருகிறது.
இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் இந்த யானை, ஊருக்குள் உலா வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. வழியில் விவசாய பயிர்களை உண்டும், மிதித்தும் சேதப்படுத்திவிட்டு, தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு செல்வது வழக்கம். தினசரி நடமாடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், அதனை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி யானை, பவானி ஆற்றுக்கு சென்று விட்டு நேற்று காலை அருகில் உள்ள சமயபுரம் என்ற இடத்தில் புகுந்து, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்து சென்றது. இதையறிந்த மக்கள், வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து, கதவை தாழிட்டுக் கொண்டனர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையைக் கடந்து நெல்லிமலை வனப்பகுதியை நோக்கி யானை சென்றது.