

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையை ஒட்டி இயற்கை அரணாக வளர்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து, தனியார் நிறுவனம் ஒன்று பொழுதுபோக்கு மையம் அமைக்க முயற்சித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘தனியாருக்கு சொந்தமான இடம் இது’ என்று வனத்துறை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், கடற்கரையையொட்டி அரசின் பொது இடமாக இப்பகுதி உள்ளது. திட்டமிட்ட கட்டமைப்புடன் வளர்ந்து வரும் சுற்றுலா நகரம் புதுச்சேரி. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநில அரசு சுற்றுலா துறைக்கென பல திட்டங்களை கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக புதுச்சேரி முழுவதும் நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் தனியார் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, 2004 சுனாமிக்குப் பின், அமைக்கப்பட்ட மாங்குரோவ் காடுகளை அழித்து, கடற்கரையையொட்டி பொழுது போக்கு மையம் ஒன்றை தனியார் அமைப்பினர் உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பல இடங்களில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் இயற்கைச் சூழலை அழித்து, இதுபோல் உருவாக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "சுனாமியை யாரும் மறக்க முடியாது. நுாற்றுக் கணக்கான மக்கள் இப்பகுதியில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரை இழந்தனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடல் மற்றும் மன அளவில் பாதிப்பு ஏற்பட்டு, தங்கள் பொருளாதாரத்தை இழந்து, இன்னும் அந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.
இனியொரு கோரத் தாண்டவம் நடக்கக் கூடாது எனக்கருதி, சூழியல் வல்லுநர்களின் பரிந்துரைப்படி, சுனாமியின் அலை வேகத்தை கட்டுப் படுத்த கடற்கரை யோரம் மாங்குரோவ் காடுகளை வளர்க்க அரசு திட்ட மிட்டது. அதன்படி புதுச்சேரியில் கடற்கரையோரம் மற்றும் முகத்துவார பகுதியில் பல ஏக்கரில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று புதுச்சேரி தேங்காய்த்திட்டு முகத்துவாரம் மேற்கு பக்கம் உள்ள மாங்குரோவ் காடுகள். இப்பகுதிகளில் 4 ஏக்கர் நிலத்தைச் சுற்றி தனியார் நிறுவனம் வேலி கட்டியது. அடுத்த சில நாட்களில் முகத்துவார கரையோரம் உள்ள மாங்குரோவ் காடுகளை ஜேசிபி வைத்து அழித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
பச்சைப்பசேல் என இருந்த முகத்துவார பகுதியில், திடீரென ஒரு பகுதி கட்டாந்தரையாக மாற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினர் மாங்குரோவ் காடுகளை அழிப்பது தெரிந்தால் பிரச்சினை வரும் என தெரிந்து, இக்காடுகளைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள வேலி கம்பங்கள் வனத்துறையின் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து பார்க்கும் பொதுமக்கள் வனத்துறை தான், ஏதோ சமூக வெளி காடுகளுக்கான வேலையை செய்கிறது என நம்பும் வகையில் இதுபோன்று வேலி அமைத்து மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வேலையை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது பற்றி அங்கு சென்ற விசாரித்து, இதை தனியார் தரப்பு செய்வதை உறுதிபடுத்தி, வனத்துறையிலும் புகார் தந்துள்ளோம். மத்திய அரசுக்கும் புகார் அனுப்பியுள்ளோம்" என்றனர்.
புதுச்சேரியில் மரத்தை வெட்டினாலே சில அமைப்புகள் போராட்டத்தில் இறங்குவார்கள். மரம் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும் அதை வெட்டும் உரிமையாளர் மீது வனத்துறை வழக்கு போடும்; அபராதத்தை விதிக்கும். ஆனால் இப்போது இயற்கை அரணாக இருக்கும் மாங்குரோவ் காடுகளை அழித்திருப்பதை எந்த அமைப்பினரும் கண்டு கொள்ளவில்லை. வனத்துறையும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையையொட்டி சுந்தர வனத் தாவரங்கள் உள்ள இந்தப் பகுதி அரசுக்கு சொந்தமானது; இதை தனியாருக்கு சொந்தம் எனக் கூறி வருகின்றனர் இதையும் வனத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.