ம.பி கிராமத்தில் திரிந்த நோயுற்ற சிறுத்தையை தொந்தரவு செய்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ

ம.பி கிராமத்தில் திரிந்த நோயுற்ற சிறுத்தையை தொந்தரவு செய்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ

Published on

தேவாஸ்: மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்ரேலா கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட சிறுத்தை ஒன்று வலம் வந்துள்ளது. அது கிராம மக்களின் பார்வையில் பட, வளர்ப்பு பிராணியை போல அதை கையாண்டுள்ளனர். மக்கள் ஒன்று திரண்டு அந்த சிறுத்தையை தொட்டும், விரட்டியும் விளையாடி உள்ளனர். அதோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த அவர்கள், அதன் மீது ஏறி சவாரி செய்யவும் முயற்சித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

முதலில் கிராம மக்கள் அந்த சிறுத்தையை பார்த்ததும் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால், அது சோம்பலாக இருந்ததை பார்த்ததும் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் அந்தக் கிராமத்தை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். 2 வயதான அந்தச் சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுத்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

“வளர்ச்சி என்ற போர்வையில் ஏற்கெனவே விலங்குகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து வருகிறோம். இப்போது அதனை மெல்ல தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளோம். மனிதர்களாகிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும்” என இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in