

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. அதுபோல இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையும் கைகொடுக்கவில்லை. இதனால் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. குளங்களும் வறண்டுவிட்டன. கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்துகிறது. விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றன.
உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக் கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சியை தாங்கி நிற்கக்கூடிய பனைமரங்கள் கூட கருகுவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மரங்களை காக்க தங்களால் முடிந்தவற்றை செய்து போராடி வருகின்றனர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.குணசீலன் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: கடும் வறட்சியை கூட தாங்கக்கூடியவை பனை மரங்கள். இந்த மரங்களே கருகுகின்றன என்றால், நிலத்தடி நீரானது அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதே காரணம்.
மழைக் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை குளங்களில் முறையாக சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகள் பாலைவனமாக காட்சியளிக்கின்றன. சில பகுதிகளில் குறைந்த அளவு நிலத்தடி நீர் இருக்கிறது. ஆனால், அது உவர் நீராக இருக்கிறது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக மாறிவிட்டது.
இந்த தண்ணீர் மூலமாவது தென்னை மரங்களை பாதுகாக்க முடியுமா என விவசாயிகள் போராடி வருகின்றனர். டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கியும் தென்னைக்கு ஊற்றி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்குரிய இழப்பீடும் வழங்க வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க வேண்டும். சடையநேரி கால்வாயை அதிக தண்ணீர் செல்லும் வகையில் விரிவாக்கம் செய்து, நிரந்தர கால்வாயாக மாற்ற வேண்டும் என்றார் அவர்.