சீமை கருவேல மரங்களால் அடையாளத்தை இழக்கும் வைகை ஆறு!

சீமை கருவேல மரங்களால் அடையாளத்தை இழக்கும் வைகை ஆறு!
Updated on
2 min read

மதுரை: கரீபியன் தீவுகள், மெக்சிகோ, தென் அமெரிக்கா தீவுகளை தாயகமாக கொண்ட சீமைக் கருவேல மரங்கள், தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளன.

மதுரை வைகை ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டு மில்லாது, வளி மண்டலத்தில் உள்ள காற்று மூலகங்களையும் உறிஞ்சும் தன்மை கொண் டவை என்பதால், வைகை ஆற்றில் ஓடிய கொஞ்ச நீரோட்டமும் தடைப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் ஓடும் வைகை ஆறு முழுவதும் வளர்ந்து ஆறா, காடா என தெரியாத அளவுக்கு மாறி உள்ளது. இது குறித்து வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது: சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் புரோஸோபிஸ் ஜுலிபுளோரா. இத்தாவரம் நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து வந்த தாலும் சீமைக் கருவேலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மரங்கள், ஆங்கிலேயர் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தவை எனக் கூறப்பட்டாலும், காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மரங்கள் திட்டமிட்டு இனப்பெருக்கம் அதிகரிக்கப்பட்டது. அக்காலத்தில் விறகு அடுப்புகளைத் தான் பயன்படுத்தினர். அடுப்புகளுக்கு மரக்கழிவுகள் தேவைப்பட்டன. மாட்டுச் சாணத்தை காயவைத்து உரத்துக்கு பதிலாக அடுப்புகளுக்கு பயன்படுத்தினர்.

அதை தடுக்கவே காமராஜர் ஆட்சிக் காலத்தில் சீமைக்கருவலே விதைகள் அதிகம் தூவப் பட்டன. இம்மர விதைகள் எந்த இடத்திலும் தகவமைத்துக் கொண்டு விரைவாக வளரும். அதனால், நீர்நிலைகள், அதன் அருகில் உள்ள இடங்கள், தேக்கி வைக்கப்படும் உபரி நீர் உள்ள இடங்களில் இந்த மரங்களை நடக்கூடாது என வேளாண் பல்கலைக்கழகங்கள் பரிந்துரைத்துள்ளன.

மற்ற மரங்களில் 100 விதைகளில் 30 விதைகள் மட்டுமே முளைக்கும். ஆனால் இந்த மரங்களில் 100-ல் 95 சதவீதம் முளைத்துவிடும். ஆடுகள் இந்த மரத்தின் இலைகளையும், காய்களையும் உட்கொள்ளும்போது அவற்றின் கழிவுகள் மூலம் இவை விரைவாக பரவி வளரும். இந்த மரங்களை 2 வகைகளில் கட்டுப்படுத்தலாம். நீர்நிலைகளில் இந்த மரங்களை பூப்பதற்கு முன் அகற்ற வேண்டும்.

மலட்டுத் தன்மை உண்டாக நிறைய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதன்மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம். மற்றொன்று, இந்த மரங்களை நீர்நிலைகள், தேங்கிய நீர் உள்ள பகுதிகளில் வளர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்லுயிர் சூழலில் இந்த மரங்களை முற்றிலும் அகற்றுவதும் தவறு.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த மரத்தை நம்பி மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த மரத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்கள் உள்ளன.

அதனால், இந்த மரங்களுடைய இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி நீர் தேங்கி இருக்கும் பகுதியில் வளராமல் பார்த்துக் கொண்டாலே போதும். மற்றபடி இந்த மரங்களை பற்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in