

கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களின் கரைப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை, ரேஸ்கோர்ஸ் நடைபாதை ஆகிய இடங்களில் மாதிரிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், நாட்டின் தெற்கு மண்டல அளவில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின், ஸ்மார்ட்சிட்டி மிஷன் இயக்குநரால், ஸ்மார்ட்சிட்டி விருதுகள் - 2022 அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோவை மாநகராட்சிக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பில்ட் என்விரான்மென்ட், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தேசிய அளவில், ‘பில்ட் என்விரான்மென்ட்’ பிரிவில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக கட்டமைப்பை ஏற்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் 52 நகரங்களில் இருந்து 88 முன்மொழிவுகள் பெறப்பட்டன. அதன் இறுதியில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாதிரிச்சாலை அமைத்தல், குளக்கரையை பலப்படுத்தி மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தைசிறப்பாக செயல்படுத்தியதற்காக தெற்கு மண்டல அளவிலும் கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதுகள் வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம்இந்தூரில் நடக்கும் விழாவில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது,’’ என்றார்.