

விருதுநகர்: கோடை முடிந்தும் கொளுத்தும் வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை யிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கிய போதும், விருது நகர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
குற்றால சீசன் காரணமாக, கடந்த மாதங் களில் சில தினங்கள் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் குறிப் பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்தது. போதிய அளவு மழை இல்லாததால், தற்போது அனல் பறக்கும் வெயில் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தாலும், குடிக்க தண்ணீர் கிடைக்காததாலும், வனவிலங்குகள் பல்வேறு இடங் களுக்கு தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
இவ்வாறு அடிவாரப் பகுதிக்கு வரும் வனவிலங்குகள் தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மரங்களையும் விட்டுவைப் பதில்லை. பல இடங்களில் மான்கள் தண்ணீர் தேடி ஊருக் குள் நுழையும்போது, சாலையில் அடிபட்டு இறப்பதும் தொடர்கிறது. வனத்துறை சார்பில், வனப் பகுதியில் பல்வேறு இடங்களில் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள் ளன.
ஆனால், சதுரகிரி பகுதியில் இதுபோன்ற தண்ணீர் தொட்டிகள் இல்லாததால், இப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விலங்குகள் இடம்பெயர்ந்து வருவதாக, வனத் துறையினர் தெரிவித்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஓடைகள், காட்டா றுகள் வறண்டு போயுள்ளன. சதுரகிரி பகுதியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, கோரக்கர் குகை ஓடை, பிளாவடிக் கருப்பு கோயில் அருகே உள்ள ஓடைகள் உள்ளிட்டவை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இதனால், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கொண்டுசெல்லும் தண்ணீர் பாட்டிலை பறித்து குரங்குகள் நீர் அருந்தும் நிலை உள்ளது. பக்தர்களும் குரங் குகளுக்கு தண்ணீர் கொடுக் கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது வறட்சி நிலவுகிறது.
அடர்ந்த மற்றும் உச்சிப் பகுதியில் வசித்து வந்த விலங்குகள் தண்ணீருக்காக தற்போது அடிவாரப் பகுதியை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. அடிவாரப் பகுதியில் கட்டப் பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் அருந்தும் வன விலங்குகள், வேறெங்கும் செல்லாமல் அப்பகுதியிலேயே சுற்றி வருகின்றன’ எனத் தெரிவித்தனர்.