

காஞ்சிபுரம்: ஆயிரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலையை வாங்குவதற்கும், கோயில்களை தரிசிப்பதற்கும் தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த மாநகருக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநகராட்சியில் முறையான மழைநீர் கால்வாய்கள் இல்லை. பல மழைநீர் கால்வாய்கள் புதர் மண்டிய நிலையில் உள்ளன. மேலும் சில காய்வால்கள் பாலித்தீன் பைகளால் நிரம்பியும், மண் அடைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் சிதைந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் முறையான இணைப்புகள் ஏற்படுத்தப்படாமல் துண்டு, துண்டாக உள்ளன.
இந்த மழைநீர் கால்வாயை தூர்வாரி சரி செய்து முறையான இணைப்புகளை ஏற்படுத்தி அருகாமையில் உள்ள மஞ்சள் நீர் கால்வாய்க்கு கொண்டு செல்லும் வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் மழைநீர் தேங்காமல் காஞ்சிபுரம் மாநகரை பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தில் அமைப்பாளர் கோ.ரா.ரவி கூறியதாவது: மழைநீர் கால்வாய் முறையான இணைப்புகளுடன் இல்லாமல் இருப்பதாலும், தூர்ந்த நிலையில் இருப்பதாலும் இதில் மழை நீர் செல்வதில்லை. இதனால் மழைக்காலங்களில் தெருக்களிலும், இந்த கால்வாயிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் பெருச்சாளிகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது. மழைநீர் கால்வாயை தூர் வாரி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இதேபோல் சமூக ஆர்வலர் அவளூர் சீனுவாசன் கூறும்போது, சுற்றுலா நகரமாக காஞ்சிபுரத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஆனால் மழைநீர் கால்வாய் சரி இல்லாததால் மழைக் காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலைகளில் வழிந்தோடுகிறது. மாநகரத்தின் அழகு கெடுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. மழைக் காலத்துக்கு முன்பாக மழைநீர் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி முக்கிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது பெரும்பாலும் உடைந்த நிலையிலும், தூர்ந்த நிலையிலும் இருப்பவை பழைய மழைநீர் கால்வாய்கள். ஒவ்வொரு வார்டிலும் இதுபோல் இருக்கும் மழைநீர் கால்வாய்களை கணக்கெடுத்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டப்பட்ட கால்வாய்கள் சரியாகவே உள்ளன என்றார்.