

கோவை: கோவை வஉசி பூங்கா மற்றும் மூத்த குடிமக்கள் பூங்காக்களில் பயன்பாடின்றி காணப்படும் தோட்டக் கழிவை உரமாக்கும் மையங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சிக்கு சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் இருந்து தினமும் 1,100 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. தரம் பிரிக்கப்படாமல் எடுத்துச் செல்லப்படும் குப்பை தொடர்ச்சியாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்ததால், அங்கு தேக்கி வைக்கப்படும் குப்பையின் அளவு பன்மடங்கு அதிகரித்தது.
இதையடுத்து, வெள்ளலூருக்கு வரும் குப்பையின் அளவை குறைக்க, வார்டுகளிலேயே குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக்கும் மையங்கள் அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வார்டுகளில் நுண்ணுயிர் தயாரிப்பு மையங்கள், பூங்காக்களில் தோட்டக்கழிவுகளை உரமாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வ.உ.சி தாவரவியல் பூங்கா, வ.உ.சி மூத்த குடிமக்கள் பூங்கா ஆகியவற்றில் தோட்டக் கழிவுகள் மூலம் உரம் தயாரித்தல் மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இம்மையங்கள் பயன்பாட்டில் இல்லை.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர் கண்ணன் கூறும்போது, ‘‘இம்மையங்கள் தொடங்கப்பட்ட சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தன. தோராயமாக ஒரு டன் அளவுக்கு உரம் தயாரிக்கும் திறன் கொண்டவை. இரண்டு இடங்களிலும் தலா 4 தொட்டிகளுடன், அதற்கான கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டன.
இந்த மையங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் உள்ளன. இதை முறையாக பயன்படுத்தும் பட்சத்தில் அந்தந்த பூங்காக்களில் உருவாகும் தோட்டக்கழிவுகளை முறையாக அழிக்க முடியும். இப்பூங்காக்களில் தினமும் பல கிலோ அளவுக்கு பசுமைக் கழிவுகளான தோட்டக் கழிவுகள் சேகரமாகின்றன.
தற்போது இம்மையங்கள் பயன்படுத்தப் படாமல் உள்ளதால், இங்கு சேகரமாகும் தோட்டக் கழிவுகள் வேறு வழியின்றி மற்ற குப்பையுடன் சேர்த்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. உரமாக்கும் கட்டமைப்புகளில் குப்பை தேங்கி, காட்சிப் பொருளாக உள்ளன. இம்மையங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.