Published : 25 Nov 2017 11:29 am

Updated : 25 Nov 2017 11:29 am

 

Published : 25 Nov 2017 11:29 AM
Last Updated : 25 Nov 2017 11:29 AM

இந்த ‘நெல்’ பெருகும்!

“நி

லத்துக்கு உயிர் இருக்கு. அது மூச்சு விடணும். ஆனால், அதை மூச்சு விடச் செய்யாம, தொடர்ந்து மூன்று போகமும் தண்ணீரைக் கட்டி, நெல்லு நட்டுக்கிட்டே இருக்கோம். அப்புறம் எப்படி நிலம் உயிரோடு இருக்கும்?” என்று தான் செல்லும் இடமெல்லாம் சொல்லி வந்த ஐயா ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி, கடந்த 15-ம் தேதி இயற்கையுடன் கலந்தார். அவரைப் பற்றி, அவரது சகோதரர் புருஷோத்தமன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:


எங்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம். ஆரம்பத்தில் எங்கள் தந்தை மட்டுமே விவசாயத்தைக் கவனித்துவந்தார். அவருக்குத் துணையாக எனது அண்ணன்கள் இருவரும் இருந்தனர். எனது தந்தை குதிரைவால் சம்பா, ஐ.ஆர். 20, பொன்மணி, கார் அரிசி, சென் (மோட்டா ரகம்) போன்ற நெல் ரகங்களைப் பயிர் செய்துவந்தார்.

எங்கள் உணவுக்குக் குதிரைவால் சம்பா மற்றும் ஐ.ஆர். 20 ரக நெல்லையே பயன்படுத்தினோம். குதிரைவால் சம்பாவைச் சாதத்துக்கும், ஐ.ஆர்.20 ரகத்தைப் பலகாரத்துக்கும் பயன்படுத்தினோம். அன்றைய நாட்களில் நாங்கள் பயிர் செய்த எந்த ஒன்றுக்கும் பூச்சிக்கொல்லியைத் தெளித்ததில்லை. கொஞ்சம் செயற்கை உரம் மட்டும் இடுவோம்.

25chnvk_nel3.jpg ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி விவசாயமே வேலை

அப்பாவின் காலத்துக்குப் பிறகு, அண்ணன் நெல் கிருஷ்ணமூர்த்தி, மிக நுணுக்கமான முறையில் விவசாயத்தைச் செய்ய முயன்றார். ஆனால், எங்களின் இன்னொரு அண்ணனுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவருக்கு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாத விவசாயத்தின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. எனவே, இரண்டு அண்ணன்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெரிய அண்ணன் விவசாயத்திலிருந்து விலகினார்.

1971-ம் ஆண்டு பி.யூ.சி. முடித்த கிருஷ்ணமூர்த்தி, பின்னர் தட்டச்சு கற்றுக்கொண்டார். அவருடன் படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்குச் சென்ற நிலையில், இவர் விவசாயம் பார்க்கவந்தார். அதனால் ஏளனம், அவமானத்தை எதிர்கொண்டார்.

நம்மாழ்வார் அறிமுகம்

இப்படிப் போய்க்கொண்டிருந்த அவர் வாழ்க்கையில், 2007-ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாகூருக்கு வந்தார். அவரது உரையைக் கேட்பதற்கு கிருஷ்ணமூர்த்தியை அவரது நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றார்.

அந்தக் கூட்டத்துக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து அவரின் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தார். பின்னர், நம்மாழ்வார் நடத்திவந்த ‘வானக’த்துக்குச் சென்று பயிற்சி பெற்றும், இயற்கை வேளாண்மை செய்யும் பலரின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்றும் தனது பட்டறிவை வளர்த்துக்கொண்டார்.

குடும்பத்துக்கும் பயிற்சி

2008-ம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களைக்கொண்டு, முழு வீச்சில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கினார். எங்கள் நிலத்தில் நெல் ரகங்கள் நன்றாக விளையும் என்பதால், முதலில் மாப்பிள்ளை சம்பா நெல்லை இயற்கை வேளாண் முறையில் வளர்த்துப் பார்த்தார். அது மிக அழகாக, உயரமாக வளர்ந்து, சாயாமல் நின்று நல்ல விளைச்சலைத் தந்தது.

சாகுபடியான நெல், விதை நெல் ஆகியவற்றை அண்ணன் விற்க முயன்றபோது, அவருக்கு நெல் ஜெயராமன் போன்றோரின் நட்பு கிடைத்தது. அவர் மூலம், மேலும் சில இயற்கை விவசாயிகளின் தொடர்புகள் அவருக்குக் கிடைத்தன. அவர்கள் ஒருவருக்கு மற்றொருவர், விதைகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்காகவும் கிருஷ்ணமூர்த்தி உழைக்க ஆரம்பித்தார். ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி என்கிற அடைமொழி அப்படித்தான் அவருக்கு வந்தது.

25chnvk_nel1.jpgright

இயற்கை வேளாண்மையை நாங்களும் ஏற்க வேண்டும் என்பதற்காக, வீட்டில் உள்ளவர்களை எல்லாம் நம்மாழ்வாரின் பயிற்சிக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். குடும்பத்தை நிலத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சியும் அளிப்பார். அந்தப் பயிற்சி முகாம்களுக்குச் சென்ற நானும் இப்போது அண்ணனின் வழியைப் பின்பற்றிவருகிறேன்.

பயின்றார்… பயிற்றுவித்தார்…

இவ்வாறு அவரது பயணம் தொடர்ந்தது. அரசு நடத்தும் விவசாயக் கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், இயற்கை வேளாண் அமைப்புகள் நடத்தும் நெல் திருவிழாக்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்வார் கிருஷ்ணமூர்த்தி. அதனால் அவரது தொடர்புகளும் அனுபவங்களும் மேலும் விசாலமடைந்தன. ஒரு கட்டத்துக்குப் பிறகு, இதர விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு அவர் வளர்ந்தார்.

இந்த விஷயங்களை எல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், இயற்கை வேளாண்மை செய்ய அவர் முற்பட்டபோது, நிலத்தைப் பண்படுத்த அவர் படாதபாடு பட்டார். முதல் முறை நல்ல விளைச்சல் வந்தால், அடுத்த முறை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. அதற்கு அடுத்த முறை, மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப் போகும். அப்போது நஷ்டப்படுவார். இப்படி பல்வேறு இக்கட்டுகளைத் தாண்டி, இயற்கையுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே இருந்தார்.

இயற்கை வேளாண்மையின் மீதிருந்த தீவிர நம்பிக்கையால், அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது. அந்த நம்பிக்கை, இன்றைக்கு இயற்கை வேளாண்மை செய்யத் தொடங்கும் அனைவருக்கும் வரவேண்டும் என்பதுதான் அவரின் விருப்பமும்!


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x