

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை, மயக்க ஊசி செலுத்தி நேற்று அதிகாலை வனத்துறையினர் பிடித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், மக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப் சிலிப் வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஒரு சில தினங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை, சேத்து மடை வழியாக மதுக்கரை வரை சென்றது. பின்னர் அங்கு மயக்க ஊசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்டு, மக்னா யானைக்கு காலர் ஐ.டி கருவி பொருத்தப்பட்டு, மானம்பள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட மந்திரிமட்டம் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ஆனால், சில வாரங்களில் அங்கிருந்தும் வெளியேறி, ஆனைமலையை அடுத்த சரளப்பதி கிராமப் பகுதியிலுள்ள மலை அடிவாரத்தில் மக்னா யானை முகாமிட்டது. பகல் நேரத்தில் வனப்பகுதியில் இருக்கும் யானை, இரவு நேரத்தில் மலை அடிவாரத்திலுள்ள சரளப்பதி கிராமத்தின் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
கடந்த 4 மாதங்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வரும் மக்னா யானையை பிடிக்க வலியுறுத்தி, மாவட்ட வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்னா யானையை பிடிக்க வனத்துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
கடந்த சில நாட்களாக 3 கும்கி யானைகள் உதவியுடன் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மலை அடிவாரப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கும்கி யானைகளின் வாசனையை மோப்பம் பிடித்த மக்னா யானை, வனத்துறையினர் பிடிக்க திட்டமிட்டிருந்த சரளப்பதி பகுதிக்கு வருவதை தவிர்த்து, சேத்துமடை வனப்பகுதிக்கு இடம் மாறியது. இதையடுத்து, 3 கும்கி யானைகளும் மீண்டும் முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானை கபில் தேவுடன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ் தேஜா, உதவி வனப் பாதுகாவலர் செல்வம், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி, வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சரளப்பதி கிராமத்தில் முகாமிட்டனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வனமுத்து மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள நாகதாளி பள்ளம் பகுதிக்கு வந்த மக்னா யானை மீது, வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் துப்பாக்கி மூலமாக மயக்க ஊசியை செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்னா யானையை, கும்கி கபில் தேவ் உதவியுடன் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் கயிறு கட்டி லாரிக்கு இழுத்து வரப்பட்டது.
லாரியில் ஏற மறுத்த மக்னா யானையை, தனது தந்தத்தால் கும்கி கபில்தேவ் முட்டி தள்ளியது. முரண்டு பிடிக்காமல் மக்னா யானை லாரியில் ஏறியதை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, வால்பாறைக்கு கொண்டு சென்று இ.எம்.எஸ் கருவி பொருத்தப்பட்ட பிறகு சின்னகல்லாறு அடர்ந்த வனப்பகுதியில் மக்னா யானையை நேற்று மாலை வனத்துறையினர் விடுவித்தனர்.