

பொள்ளாச்சி: உயிரிழப்பு ஏற்படும் முன் மக்னா யானையை பிடிக்க வேண்டும் என, சரளப்பதி பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானையை பிடித்த வனத்துறையினர், கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். அங்கிருந்து வெளியேறிய யானை பொள்ளாச்சி அருகே சரளப்பதி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மக்னா யானையை பிடிப்பதற்காக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து மூன்று கும்கி யானைகளை வரவழைத்து சரளப்பதியில் வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து சரளப்பதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,‘‘மக்னா யானையை பிடிக்கும் விஷயத்தில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். சரளப் பதி மாரியம்மன் கோயிலில் 3 கும்கி யானைகளுடன் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பல பேரின் உயிரை பறித்த நிலையில் இங்கும் உயிரிழப்பு ஏற்படும் முன்பாக மக்னா யானையை பிடிக்க வேண்டும்” என்றனர்.