ஓசூர் அருகே சாலையோரங்களில் கொட்டப்படும் கிரானைட் கழிவுகளால் பாழ்படும் விளைநிலங்கள்

ஓசூர் அருகே சாலையோரங்களில் கொட்டப்படும் கிரானைட் கழிவுகளால் பாழ்படும் விளைநிலங்கள்
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் அருகே சாலையோரங்களில் கொட்டப்பட்டு வரும் கிரானைட் கழிவுகளால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை தடுக்க விதிமுறைகளைப் பின்பற்றி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜல்லிகிரஷர்கள் மற்றும் கிரானைட் குவாரிகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், எம்சாண்ட் மணல் மற்றும் விலை உயர்ந்த கிரானைட் கற்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்கின்றன.

கிரானைட் கற்களை வெட்டி அறுக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் கசடு கழிவுகளை இரவு நேரங்களில் டிராக்டர்களில் மூலம் அகற்றி மாசி நாயக்கனப்பள்ளி, சாணமாவு, காமன்தொட்டி, பேரண்டப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள சாலையோரங்கள் மற்றும் விளை நிலங்களையொட்டியுள்ள காலி நிலங்களில் கொட்டி வருகின்றனர்.

இதனால், துகள்போல உள்ள இந்த கசடுகள் காற்று மற்றும் மழைக்கு பறந்து சென்று அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் பயிர்கள் மீது படருவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கல் குவாரிகளிலிருந்து பெரிய பாறைகளை வெட்டி எடுத்து அதனை கிரானைட் கற்களாக அறுக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் சிமென்ட் போன்ற கசடு கழிவு அதிக அளவில் சேருகின்றன. அதேபோல கிரானைட் கற்களை பாலீஷ் செய்யும்போது, அதிலிருந்தும் துகள் போன்ற கழிவுகள் சேருகின்றன. இவற்றை குவாரிகளிலிருந்து வாகனங்களில் எடுத்து வந்து சாலையோரங்களில் கொட்டுவது அதிகரித்து வருகிறது.

இத்துகள்கள் காற்றில் பறந்து வந்து விளை நிலங்களில் படியும்போது, மண்ணின் இலகுத்தன்மை மாறி மண் கடினமாகிப் பயிர் செய்வதற்கான ஏற்ற நிலை மாறுகிறது. அதேபோல இக்கழிவுகள் காற்றில் பறந்து பயிர்கள் மீது படர்வதால், இலைகளில் படரும் துகள்கள் மீது சூரிய ஒளிபடும் போது இலைகள் கருகி செடிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், மகசூல் பாதிக்கப்படுகிறது.

எனவே, இப்பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகள் மற்றும் கல்குவாரிகளிலிருந்து கழிவுகள் மற்றும் கசடுகளை அப்புறப்படுத்த உரிய நடை முறைகளைப் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுபோல சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in