Published : 29 Jul 2023 06:20 PM
Last Updated : 29 Jul 2023 06:20 PM

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு: சிறந்த காப்பமாக ஆனைமலை தேர்வு 

சென்னை: தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பம் 91.67 மதிபெண்களுடன் 7-வது இடத்தைப் பெற்று, மிகச் சிறந்த புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி, நம் நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததைத் தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புலிகளை பாதுகாப்பதன் மூலம் வனவளத்தை பாதுகாக்க முடியும். அது பல்லுயிர் பெருக்கத்துக்குப் பெரிதும் உதவும். 5 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு தொடர்பாக இறுதி மற்றும் 5-வது சுற்று அறிக்கையை மத்திய அரசு இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ளது. உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கார்பெட் புலிகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே விரிவான இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், 51 புலிகள் காப்பகங்களின் செயல்முறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடு பணிகயை மேற்கொள்ள அமைக்கப்பட்ட 10 சுயேச்சையான பிராந்திய நிபுணர் குழுக்கள் 51 புலிகள் காப்பகங்களுக்கும் சென்று கள இயக்குநர்கள் சமர்ப்பித்த ஆதரவு ஆவணங்களை சரிபார்த்த பின்னர் மதிப்பெண்களை அளித்துள்ளனர். இதில், அதிகபட்ச மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் முடிவுகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளது. 50-59% வரை 'சுமார் ' என்றும், 60-74% வரை 'நன்று' என்றும், 75-89% வரை 'மிகவும் நன்று'என்றும், 90% க்கு மேல் "சிறந்தது" என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்தம் 12 புலிகள் காப்பகங்கள் 'சிறந்தது' பிரிவிலும், 21 புலிகள் காப்பகங்கள் 'மிக நன்று' பிரிவிலும், 13 புலிகள் காப்பகங்கள் 'நன்று' பிரிவிலும், 5 புலிகள் காப்பகங்கள் 'சுமார்' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இதில், 94.53 மதிபெண்களுடன், தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சத்புரா புலிகள் காப்பகம் 93.18 மதிபெண்களுடன் இரண்டாவது இடத்திலும், பந்திப்பூர் புலிகள் காப்பகம் 93.18 மதிப்பெண்களுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

இவற்றில் தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பம் 91.67 மதிபெண்களுடன் 7-வது இடத்தை பெற்று மிகச் சிறந்தது என்றும், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை ஆகியவைகள் மிக நன்று என்றும், ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை ஆகியவை நன்று என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதன்படி 2018ம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 306 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதன்படி 2006-ஆம் 76, 2010-ம் ஆண்டு 163, 2014-ம் ஆண்டு 229 புலிகள் தமிழகத்தில் இருந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x