Published : 11 Nov 2017 11:16 AM
Last Updated : 11 Nov 2017 11:16 AM

வெள்ளம் இல்லை…. ஆனால் மிதக்கிறது சென்னை!

 

ழை கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறது. ஆனால், மக்கள் இன்னும் அல்லாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் 2015-ம் ஆண்டு பெய்ததைப் போல பெருமழை பெய்யவில்லை. இருந்தும் மழை நாட்களில் சாலையில் வெள்ளம்போல நீர் பெருகி ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில் மழைநீர் தேங்கி, இன்னமும் வடியாமல் இருக்கிறது. பல பகுதிகளில் முழங்கால் அளவு நீர் நின்றிருக்கிறது. இந்த வெள்ளம் சூழ் நாட்களுக்குக் காரணம் என்ன?

நீருக்கு நினைவு உண்டு

மழையை நாம் குற்றம் சொல்ல முடியாது. மழை நீரைச் சரியாகச் சேமிக்கத் தெரியாத நம்மை, நாமேதான் நொந்துகொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஜரூராக மேற்கொள்ளப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், காலப்போக்கில் காலாவதியாகி விட்டது.

நகரம் முழுக்க சுமார் 9 லட்சம் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருக்கும் கட்டமைப்புகளைச் சரியாகப் பராமரித்தால் சுமார் 3 டி.எம்.சி. நிலத்தடி நீரை ஒவ்வோர் ஆண்டும் சேமிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், மேற்கண்ட 9 லட்சத்தில் எத்தனை கட்டமைப்புகள் இன்றும் செயல்பாட்டு நிலையில் இருக்கின்றன என்பதைப் பற்றி எந்த ஆய்வும் இல்லை.

இப்படியிருக்கும் சூழலில், மழை நீர் தாழ்வான பகுதிகளை நோக்கி நகர்கிறது. எங்கெல்லாம் மழை நீர் தேங்கி நிற்கிறதோ, அங்கெல்லாம் முன்பொரு காலத்தில் நீர்நிலைகள் இருந்திருக்க வேண்டும். இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளாலோ வீடுகளாலோ அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில், வெள்ளத்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நீரால் சூழப்படுவதற்கு இதுதான் காரணம்: ஏனென்றால் நீருக்கும் நினைவுகள் உண்டு! நீர் எப்போதும் உயரமான இடத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் பாயும். மேற்கொண்டு நகர முடியாத இடத்தில் ஏரி, குளம், குட்டையாகத் தேங்கும். இன்றைக்கும் நீர் தன் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அது வந்து சேரும் இடங்களில் வீட்டையோ, சாலையையோ நாம் அமைத்திருக்கிறோம் என்பது மட்டும்தான் மாற்றம்.

முன் ஏற்பாடு இல்லை

பருவ மழை குறித்து கணிப்புகள் வெளியான உடனேயே, அரசு இயந்திரம் திட்டமிடத் தொடங்கியிருக்க வேண்டும். குப்பையும் கழிவுகளும் தேங்கியிருக்கும் ஆறுகளை, கால்வாய்களைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாததுதான் பல இடங்களில் நீர் தேங்க வழி செய்தது. தூர்வாரினால் மட்டும் போதாதே. அந்த ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் கரைகளையும் பலப்படுத்த வேண்டும். அப்படி பலப்படுத்தாமல் போனதால் நன்மங்கலம், நெமிலிச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள ஆயக்கட்டுகளின் கரைகள் உடைந்து மழை நீர் வீணானது.

இந்த மழையில், சென்னையில் பல சாலைகள் நீரில் மூழ்க, திருவான்மியூரில் உள்ள டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நகர் மெயின் ரோடுப் பகுதியில் நீர் தேங்கவில்லை. காரணம், அங்கு சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் வடிகால் கட்டமைப்பு. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு நலச் சங்கங்கள் அரசுடன் இணைந்து இத்தகைய வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 2015-ம் ஆண்டு வெள்ளத்திலிருந்து அந்த மக்கள் பாடம் கற்றுக்கொண்டார்கள். அதன் நல்விளைவே இது.

ஆனால், அரசுதான் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. நகரத்தின் இதர சாலைகளில் இதுபோன்ற வடிகால் கட்டமைப்புகள் இருந்தாலும், அவை நீர் உள்ளே செல்லாதபடி, மண் மூடியிருக்கின்றன. அவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்துவந்திருந்தால், நீர் தேங்காத சாலைகளில் மக்கள் அவதிப்படாமல் பயணித்திருப்பார்கள். மேலும் பல வடிகால் கட்டமைப்புகளின் வடிவமைப்பு தவறாக இருப்பதாகவும் நீரியல், வானிலையியல் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அந்த வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த மழைக்குள்ளாகவாவது அரசு குறைந்தபட்சமாக விழித்துக்கொள்ளுமா?

 

பருவநிலை மாற்றம் காரணமா?

பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், வடகிழக்குப் பருவ மழையின்போது, ஓர் ஆண்டுக்கான மழைப்பொழிவில் சுமார் 60 சதவீதத்தை சென்னை பெறுகிறது. 2015-ம் ஆண்டில், வெறும் 26 நாட்களில் 50 சதவீத மழைப்பொழிவை சென்னை பெற்றது.

இந்த ஆண்டு, நவம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் சுமார் 70 சதவீத மழைப்பொழிவை சென்னை பெற்றிருக்கிறது. மேலும் நவம்பர் 2-ம் தேதி, சென்னையில் 183 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய மழைப்பொழிவு.

ஒரே நாளில் 250 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தால், அதை ‘தீவிர நிகழ்வு’ என்று வரையறுக்கிறார்கள், பருவநிலை மாற்ற ஆய்வாளர்கள். 183 மி.மீ. மழைப்பொழிவுக்கும், 250 மி.மீ. மழைப்பொழிவுக்கும் இடைவெளி அதிகமில்லை. அப்படியான தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலத்தில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பருவநிலை மாற்ற பாதிப்புகளை சென்னை எதிர்கொண்டு வருகிறது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x