Published : 04 Nov 2017 11:25 AM
Last Updated : 04 Nov 2017 11:25 AM

கேமரா அல்ல, கற்பனையே பெரிது

டந்த மாதத்தில் ஒரு நாள், பறவை நோக்குவதற்காக பழவேற்காடு ஏரிக்குச் சென்றிருந்தோம். படகில் சென்று கொண்டிருந்தபோது, பளிச்சென்ற நிறம் கொண்ட மீன் போன்ற ஏதோ ஒரு உயிரினம் எங்கள் படகுக்கு அருகில் சட்டென்று வந்து மறைந்தது.

எங்கள் படகிலிருந்த மீனவரிடம் அதைச் சுட்டிக்காட்டிக் கேட்டதற்கு, ‘அது சொறி (ஜெல்லி) மீன்கள்’ என்றார். “நாங்கள் மீன், இறால் போன்றவற்றைப் பிடிக்கச் செல்லும்போது, இந்த சொறி மீன்கள் தவறுதலாக வலைக்குள் வந்துவிடும். அப்படி வந்தால், அது எங்களைப் பாடாய்ப்படுத்தி விடும். நாங்கள் தவறுதலாக அந்த மீனைத் தொட்டாலோ அல்லது அந்த மீன் எங்கள் மீது பட்டாலோ, உடலில் எந்த இடத்தில் பட்டதோ அங்கு ஒரு நாள் முதல் 7 நாள்வரை அரிப்பு இருக்கும்” என்றார்.

பல லட்சம் ஆண்டுகளாக பூவுலகில் வாழ்ந்துவரும் இந்தச் சொறி மீன்கள், உண்மையில் மீன்கள் அல்ல. இவை, முதுகெலும்பு இல்லாத உயிரினங்களின் வகைமையைச் சேர்ந்தவை.

ஆசையை விட முடியுமா?

அந்த அரிய உயிரினத்தை முதல் முறையாகப் பார்த்த எனக்கு, அதை உடனே படமெடுக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் நீருக்கடியில் ஒளிப்படம் எடுக்கும் வசதி கொண்ட கேமரா என்னிடம் இல்லை. அத்தகைய கேமராக்கள் விலை உயர்ந்தவை. அதற்காக ஆசையை அப்படியே விட்டுவிட முடியாதே?

ஆழமற்ற பகுதி என்பதால் சதுப்பு நிலத்தின் உள்ளே இறங்கிப் படமெடுக்க முடிவு செய்தேன். வீடுகளில் மீன் வளர்க்கப் பயன்படும் மீன் குடுவை ஒன்றை வாங்கினேன். ஜெல்லி மீன் வரும்போதெல்லாம், அந்தக் குடுவைக்குள் கேமராவை வைத்து மூடி வெளியிலிருந்து ஷட்டரை இயக்கிப் படமெடுத்தேன்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீரில் நின்றுகொண்டு படமெடுத்தேன். அந்த நேரம் என்னைச் சுற்றி நிறைய சொறி மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. எங்கே என் மீது பட்டுவிடுமோ என்று மனதுக்குள் பயம் ஒரு புறம். படம் நன்றாக வரவேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம். இதற்கிடையில் எடுக்கப்பட்ட படங்கள் எனக்கு திருப்தி தந்தன.

அரிய அனுபவம்

இங்கே இடம்பெற்றுள்ள படங்களை எடுப்பதற்கு எனக்கு எவ்வளவு செலவாகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மீன் குடுவை வாங்கிய செலவு 100 ரூபாய் மட்டும்தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பலரும் விலை உயர்ந்த கேமராக்கள் இருந்தால் மட்டுமே ஒளிப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. கேமராவைவிட, நமக்குக் கற்பனைத் திறனே முக்கியம். க்ரியேட்டிவிட்டி இருந்தால், சாதாரண கேமராவில்கூட ரசனையான படங்களை எடுக்க முடியும்.

வழக்கமாக சொறி மீன்களை கடலில்தான் பார்க்க முடியும். பழவேற்காடு ஒரு சதுப்புநிலம் என்பதால், நன்னீரும் கடல் நீரும் கலக்கும். இப்படி கடலுக்குள் இருந்து சொறி மீன்கள் பழவேற்காடு சதுப்புநிலத்துக்கு வந்துள்ளன. நான் அங்கே பார்த்த நாளுக்குப் பிறகு சொறி மீன்கள் வரவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தார்கள். சொறி மீன்களை அங்கே பார்த்ததும், அவற்றைப் படமெடுக்க முடிந்ததும் அபூர்வமான அனுபவம் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்பட ஆர்வலர்
தொடர்புக்கு: bala.1211@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x