

கொடைக்கானல்: கொடைக்கானல் கிழக்கு செட்டியபட்டியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, பாரதி அண்ணா நகர், கிழக்கு செட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக மலைக் கிராமங்களை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது.
இந்த யானைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று கிழக்கு செட்டிய பட்டி கிராமம் எழுத்தறைக் காடு பகுதியில் உள்ள பட்டா நிலங்களுக்குள் நுழைந்த 7 யானைகள் அங்கிருந்து தோதகத்தி மரத்தை வேரோடு சாய்த்து கீழே தள்ளிவிட்டு சென்றன.
மேலும் நிலத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியையும் சேதப்படுத்தின. யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் தோட்டங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கிராமத்துக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.