

ஓசூர்: ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
ஓசூர் ஒன்னல்வாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிபவர் அய்யப்பன். இவர் நேற்று முன்தினம் அவரது இருசக்கர வாகனத்தில் மூக்கண்டப்பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வாகனத்தை நிறுத்திவிட்டு ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பைப் பிடிக்க முயன்றபோது, வாகனத்தின் உள்பகுதிக்கு சென்றது. இதையடுத்து, இருசக்கர வாகன மெக்கானிக் மூலம் வாகனத்தை பிரித்து பார்த்தபோது, உள்ளே பதுங்கியிருந்த நாகப்பாம்பை உயிருடன் மீட்டு, காப்புக் காட்டில் விடுவித்தனர்.
தீயணைப்புத் துறை அறிவுரை - இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர் கூறியதாவது: மழைக் காலம் என்பதால் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் போது, வாகனத்தின் வெப்பத்துக்குப் பாம்புகள் புகுந்து விடும். எனவே, வாகனங்களை நிறுத்தும் போது, முட்செடிகள் மற்றும் புதர்கள் அருகே நிறுத்தக் கூடாது.
அதேபோல, வாகனங்களை எடுக்கும் போது, அதிகமாக ஆக்சிலேட்டர் கொடுத்த பின்னர் வாகனத்தை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் பாம்பு உள்ளே இருந்தால் அதிர்வில் கீழே இறங்கி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.