

சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொசுத்தொல்லை அதிகரித்தது. மழைநீர் வடிகால்களை அதிக அளவில் கட்டிய நிலையில், அவற்றில் கழிவுநீர் தேங்குவதை தடுக்காதது, கால்வாய்களில் மிதக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றாதது, தவறான பழைய நடைமுறைகளை குறிப்பாக புகை பரப்புவதையே பிரதான கொசு ஒழிப்பு பணியாக மேற்கொள்வது, நவீன தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தாதது போன்ற காரணங்களால் கொசு உற்பத்தி கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில், வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் காரணமாக வழக்கமாக சென்னை மாநகரப் பகுதியில் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டு, மாநகருக்குள் கடல் காற்று நுழைவது பாதிக்கப்பட்டது. உள்மாவட்டங்களில் இருந்து வெப்ப தரைக்காற்றே மாநகருக்குள் வீசியது. இதனால் வழக்கத்துக்கு மாறாக தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதன் தாக்கத்தால், கொசு இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, மாநகரில் கொசுத் தொல்லை குறைந்திருந்தது.
தற்போது மாநகரப் பகுதியில் அவ்வப்போது தென்மேற்கு பருவமழை பெய்துவரும் நிலையில் மீண்டும் கொசுத்தொல்லை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பராமரிப்பில் உள்ள மொத்தம் 228 கிமீ நீளம் கொண்ட 30 கால்வாய்கள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றில் மிதக்கும் ஆகாயத் தாமரை செடிகளால், அவற்றின் கரையோரப் பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது.
வடசென்னை பகுதியில், தண்டையார்பேட்டை மண்டலம் வியாசர்பாடி கேப்டன் காட்டன் கால்வாய் பகுதியில் பருவமழைக்கு முன்பாகவும் கொசுத் தொல்லை விஸ்வரூபம் எடுக்கும் காலங்களில் மட்டுமே இயந்திரங்களைக் கொண்டு ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படுவது வழக்கம். அதன்பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமாக மீண்டும் ஆகாயத்தாமரை செடிகள் வளரும்போது, அதை அப்போதே அகற்ற பணி
யாளர்களை நியமிப்பதில்லை.
கால்வாய் முழுவதும் படர்ந்துவிட்ட பிறகே அதை அகற்ற ஓரிரு ஆட்களை நியமிக்கிறார்கள். அவர்கள் பாரம்பரிய முறையில் நீண்ட கம்பைக் கொண்டு கையால் அகற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த பணியாளர்களால் ஆகாயத்தாமரை செடிகளை முற்றிலுமாக அகற்றமுடியவேயில்லை. இது கொசுத் தொல்லை ஒழிப்புக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதனிடையே கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பில், புனே மாநகராட்சியில் ஆகாயத்தாமரை செடிகளை நவீன தொழில்நுட்பத்தில் உயிரி நொதி (Bio-Enzyme) கொண்டு அழிக்கும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த முறையை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நீர்வழித் தடங்களில் ஆகாயத்தாமரை செடிகளுக்கு இடையில் வளரும் கொசுப்புழுக்களை அழிக்க, மாநகராட்சி நிர்வாகம் எண்ணெய் தெளிக்கிறது. இது நீருக்குள் ஆக்சிஜன் செல்வதை தடுத்து, கொசுப்புழு மட்டுமல்லாது இதர உயிரினங்களையும் அழித்துவிடும். இந்த முறைகளை தொடர்ந்து பயன்படுத்தியதால், கொசுப்புழுக்களை இயற்கையாக உண்டு வாழும் டிப்லோனிகஸ் இன்டிகஸ் (Dipllonychus Indicus) என்ற உயிரினத்தையே மாநகராட்சி நிர்வாகம், மாநகர நீர்நிலைகளில் இருந்து முற்றாக அழித்துவிட்டது.
ஆனால் புனே மாநகராட்சி பயன்படுத்தும் உயிரி நொதி ஆகாயத்தாமரை செடிகளை மட்டுமே அழிக்கவல்லது. நீரில் வாழும் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இது மட்டுமல்லாது மாநகராட்சி நிர்வாகம் மாநகர நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் டிப்லோனிகஸ் இன்டிகஸ் பூச்சிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று தாவரவியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "உயிரி நொதிகொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அழிப்பது தொடர்பாக புனே மாநகராட்சி மற்றும் தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.கொசுப் புழுக்களை இயற்கையாக உண்டு வாழும் டிப்லோனிகஸ் இன்டிகஸ் என்ற உயிரினத்தையே எண்ணெய் தெளித்து முற்றாக அழித்துவிட்டது மாநகராட்சி.வியாசர்பாடி கேப்டன் காட்டன் கால்வாயில் தினமும் ஆகாயத்தாமரை செடிகளை தனியொருவனாக அகற்றி வரும் மாநகராட்சி பணியாளர்.