

திருப்பூர்: கண்டங்கள் கடந்து திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வரும் வெளி நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் (குளிர் காலத்தின் போது) நஞ்சராயன் குளத்துக்கு வந்த பெரும்பாலான பறவைகள், இங்கேயே தஞ்சமடைந்து விட்டன. இது பறவைகள் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் இயற்கை கழகத்தின் தலைவர் ரவீந்திரன் கூறும்போது, “திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு, உள்நாட்டுப் பறவைகள் தற்போது அதிகளவில் வந்துள்ளன. கூழைக்கடா, நீர்க்காகங்கள், புள்ளிமூக்கு வாத்து, வண்ணநாரைகள் என அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தற்போது உள்ளன. 340 ஏக்கரில் நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைகிறது.
கிட்டத்தட்ட 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் முழுமை பெறும். 2027-ம்ஆண்டில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் திறக்கப்படலாம். கண்காணிப்புக்கோபுரங்கள், பறவைகளின் வாழ்வியல் முறை, வந்து செல்பவர்கள் பார்க்க ஏதுவாக‘சிலைடிங் சிஸ்டம்’உள்ளிட்டவற்றை வைக்கும்போது சரணாலயம்முழுமை பெறும்” என்றார்.
திருப்பூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘உள்நாடு மற்றும்வெளிநாட்டுப் பறவைகளின் காதல்தேசமாக நஞ்சராயன் குளம் உள்ளது. குறிப்பாக உள்நாட்டுப்பறவைகளின் இன்னொரு வேடந்தாங்கலாக இக்குளம்உள்ளது. வனத்துறை சார்பில் எல்லை உறுதிப்படுத்தப்பட்டு, அடுத்த கட்ட மேம்பாட்டுப்பணிகள் தொடங்கப்படும்.
நிர்வாக நடைமுறை பணிகளை விரைவாக முடித்து, சரணாலய மேம்பாட்டுப் பணிகளை தொடங்க வேண்டும். திருப்பூரில் உழைக்கும் மக்கள் ஆசுவாசப் படுத்திக் கொள்ள,சுற்றுலாத் தலம் இல்லை. இதுபோன்ற சுற்றுலாத் தலம் அமைவது, திருப்பூர் மாவட்டத்துக்கு இயற்கை கொடுத்த கொடையாகவே கருதுகிறோம்.” என்றனர்.