

பந்தலூர்: நீலகிரி மாவட்ட எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம், வேட்டை கும்பலை கண்டறிய நவீன கண்காணிப்புக்கோபுரம் கட்டப்பட்டுள்ளதால், வன ஊழியர்களின் பணிச்சுமை குறைந்துள்ளது.
தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனக்குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வரை வனப்பகுதியில் பாதுகாப்பான இடம் இல்லாமல் வேட்டை தடுப்புப்பணியில்வன ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால்,வன விலங்குகளிடம் மட்டுமின்றி வேட்டை கும்பலிடமிருந்தும் வன ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது.
மேலும், பருவ மழை காலங்களில்பாதுகாப்பான தங்கும் இடம் இல்லாததால்,மரங்களில் பரண் அமைத்தும், டென்ட் அமைத்தும் திறந்தவெளியில் மழையில் நனைந்தபடியே ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கேரள மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருவதால், தமிழக எல்லை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் வன ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
கூடலூர் பகுதியில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள காவல் நிலையங்களை சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் கட்டப்பட்டுகண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வனப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொள்ளும் வன ஊழியர்களுக்கு, கண்காணிப்புக் கோபுரம் இல்லாததால் கண்காணிப்புப் பணியில் சிக்கல் இருந்து வந்தது.
கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருந்துவருவதால், தமிழக நக்சல் தடுப்புப்பிரிவு போலீஸாரும் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வனஊழியர்களுக்கு பக்கபலமாக உள்ளனர்.
இந்நிலையில், தேவர் சோலை அருகேவாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் மற்றும் வனவிலங்கு வேட்டைக் கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கண்காணிப்புக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கோபுரத்தில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில்குடிநீர், சமையலறை, சோலார் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘கூடலூர் பகுதியில் பல மாதங்கள்தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால் வாச்சிக்கொல்லி பகுதியில்கண்காணிப்புக் கோபுரம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் இரவு, பகலாக வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் தங்கி கண்காணிப்புப் பணி மேற்கொள்வர்’’ என்றனர்.