

உதகை: பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னி கழுகுகள், இறந்த விலங்குகளைத் தின்று காட்டிலுள்ள விலங்குகளையும், நம்மையும் காத்து வருகின்றன. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
1990-களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள், தற்போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கழுகு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, தனியார் பறவை நல அமைப்புகளும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ஒவ்வோர் ஆண்டும் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்ததால், கழுகுகள் எண்ணிக்கையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கழுகுகள் குறித்து தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களிலும் சேர்ந்து மொத்தம் 246 கழுகுகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் கூடு அமைத்து பாறு கழுகுகள் இனப்பெருக்கம் செய்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நல்லதொரு செய்தி. ஆயினும், இதன் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
இவை அழிவின் விளிம்பில் தத்தளிக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம், கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வலி மருந்துகளும், கால்நடைகளின் மீது தடவப்பட்ட நச்சுகளுமே ஆகும். இதனை களையவும், விழிப்புணர்வூட்டவும் அருளகம் அமைப்பு வனத்துறை வழிகாட்டுதலுடன், பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடத்தப்பட்டது.
பாறு கழுகுகளின் வாழ்விடங்களான நீலகிரி உயிர்க் கோள சூழல் மண்டலத்துக்கு உட்பட்ட காந்தவயல், சிறுமுகை, உளியூர், பவானிசாகர், காராச்சிகோரை, ராஜன் நகர், மாவட்டத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம், ஆசனூர், காளிதிம்மம், மாவநத்தம், பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, இராமரனை, தலைமலை, நெய்தாளபுரம், கோடிபுரம், தொட்டபுரம், சிக்கள்ளி, தாளவாடி, திகநாரை, சோளகர் தொட்டி, ஜீரகள்ளி ஆகிய கிராமங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரப்பயணத்தை அருளகம் அமைப்பினர் 4 நாட்கள் மேற்கொண்டனர்.
வனத்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு பாறு கழுகுகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பாறு கழுகுகள், காடுகள் பாதுகாத்தல் குறித்து பாடலாகவும், நாடகமாகவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள், பாறு கழுகுகள், வனத்துக்கு அவை ஆற்றி வரும் தூய்மைப் பணி, வாழும் இடங்கள், பாறு கழுகுகளின் அழிவுக்கான காரணங்கள், அவற்றுக்கான உணவுப் பற்றாக்குறை ஆகிய காரணிகளை களைந்து, அவற்றின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.
நடைபயணத்தின் வாயிலாக கழுகுகளுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் குறித்தும், பாதுகாப்பான மாற்று மருந்துகள் குறித்தும் சித்த மருந்துகள் குறித்த துண்டறிக்கைம் வழங்கப்பட்டது. அருளகம் சார்பாக அமிர்தலிங்கம், பிரபு தலைமையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் கலைஞர்கள் செந்தில் மற்றும் பொன்ராஜ் ஈடுபட்டனர். அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன், ‘மக்களது பங்கேற்பு இருந்தால் பாறுக் கழுகுகளை அழிவிலிருந்து மீட்டு விடலாம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.