

மதுரை: சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, சூழலுக்கு உகந்த சணலில் பலவித பைகளை தயாரித்து விற்பனை செய்து சாதித்து வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த மகளிர் குழுவினர்.
மதுரை மாவட்டம் சாமநத்தத்தைச் சேர்ந்த துளசி மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் சுசிலா, பாண்டீஸ்வரி, சசிகலா, பத்மபிரியா உள்ளிட்டோர். இவர்கள் மகளிர் குழுக்கள் மூலம் சணலில் பலவகையான பைகள் தயாரித்து விற்பனை செய்து முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
மேலும், தமிழக அரசின் மகளிர் திட்டம் சார்பில் பல மாவட்டங்களுக்கும் சென்று அரங்குகள் அமைத்து விற்பனை செய்து வருவதோடு, பல மகளிர் குழுக்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகின்றனர். டெல்லி, கோவா, ஹரியாணா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சென்று கண்காட்சிகளில் அரங்குகள் அமைத்து தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர்.
இது குறித்து துளசி மகளிர் குழு தலைவர் சுசிலா கூறியதாவது: 1999-ம் ஆண்டில் மதுரையில் முறைசாரா கல்வி மையம் மூலம் மகளிர் குழுவைத் தொடங்கினோம். பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, சூழலுக்கு உகந்த சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து கோவையில் 2001-ல் பயிற்சி பெற்றோம்.
சாமநத்தத்தில் மகளிர் குழுவினருக்குப் பயிற்சி அளித்து சணல் பைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அரசின் மகளிர் திட்டம் சார்பில் காலேஜ் பஜார், கண்காட்சிகளில் கடைகள் அமைத்து விற்பனை செய்தோம். டெல்லி, ஹரியாணா, ஹைதராபாத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும் சென்று வருகிறோம்.
பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக சணல் பைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். சணல் பொருட்கள் உற்பத்தி செய்வதோடு பயிற்சியும் அளித்து வருகிறோம். மேலும் எங்களது மகளிர் குழு மூலம் விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தி வருகிறோம். சணல் பொருட்கள் மூலம் லேடீஸ் ஹேண்ட் பேக், ஷாப்பிங் பேக், ஸ்கூல் பேக், லேப் டாப் பேக், கிப்ட் பேக் ஆகியவற்றை தயாரித்து அனுப்பி வருகிறோம். மக்கள் விரும்பும் அளவிலும் செய்து தருகிறோம்.
வெளிமாவட்டங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறோம். தமிழக அரசின் மகளிர் திட்டம் அளிக்கும் ஊக்கத்தாலும், பொருளாதார உதவியாலும் இந்தச் சாதனையை செய்ய முடிந்தது. எங்களால் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தை எதிர்கொள்ள முடிகிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி எங்களது உற்பத்திப் பொருட்களை பார்த்து மகளிர் குழுவினரை பாராட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.