Last Updated : 28 Jun, 2023 07:05 PM

 

Published : 28 Jun 2023 07:05 PM
Last Updated : 28 Jun 2023 07:05 PM

கடும் கோடையிலும் தண்ணீர் ததும்புவதால் பறவைகளின் புகலிடமாக மாறிய சிவகளை பெருங்குளம்

பெருங்குளத்தில் குவிந்துள்ள பறவைகள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பெருங்குளத்தில் மட்டும் தண்ணீர் வற்றாமல் 10 அடிக்கு மேல் நிரம்பி காணப்படுகிறது.

நீர்வாழ் பறவைகளுக்கு புகலிடமாக மாறியுள்ள சிவகளை பெருங்குளத்தை முழுமையாக தூர்வாரி நீர்தேக்கமாக மாற்ற வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்து போனதால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை.

அணைகளிலும் நீர் இருப்பு போதுமானதாக இல்லை. தென்மேற்கு பருவமழையும் இன்னும் தொடங்கவில்லை. ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிலைகளில் வாழும் மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபமும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாவிட்டால் கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் நிலை உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.

சிவகளை பெருங்குளம்: இத்தகைய கடும் வறட்சியான சூழ்நிலையிலும் தாமிரபரணி பாசனத்தில் . தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை கீழ் குளம் என்றழைக்கப்படும் பெருங்குளம் நீர் நிரம்பி கடல்போல காட்சியளிப்பது ஆச்சரியப்படுத்துகிறது. 886 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிவகளை பெருங்குளத்தில் தற்போது ஆழமான பகுதியில் 10 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.

இதேபோல் சிவகளை மேல குளத்திலும் கணிசமான அளவுக்கு தண்ணீர் உள்ளது. மேலும், இந்த குளங்களில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. இந்த பகுதியில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் இருக்கும் என்பதால் சிவகளை மேல் குளத்தை தமிழக அரசு ஏற்கெனவே ஈரநிலமாக அறிவித்துள்ளது. சிவகளை பெருங்குளத்தையும் ஈரநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

3 போகம் விவசாயம்: இது குறித்து சிவகளை காடு போதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: சிவகளை பெருங்குளம் வறண்டு போனதாக வரலாறே இல்லை. எப்போதும் இந்த குளத்தில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

இதேபோல் சிவகளை மேல குளம் மற்றும் இந்த பகுதியில் உள்ள கிணறுகளும் வறண்டது கிடையாது. இதனால் இந்த பகுதியில் முப்போகம் விவசாயம் நடைபெறுகிறது. 2 போகம் நெல் விளைகிறது. ஒரு போகம் உளுந்து போன்ற பயிர்கள் விளைகின்றன. மேலும், சிவகளை ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.

முழுமையாக நிரம்பவில்லை: இயற்கையாகவே தாமிரபரணி ஆற்றின் பாதையில் அமைந்துள்ளதால் சிவகளை பெருங்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். இந்த குளம் தற்போது மணல் மேடாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பெருங்குளம் முழுமையாக நிரம்பியதில்லை. மற்ற குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பெருங்குளத்தை முழுமையாக நிரம்புவதற்கு அனுமதிப்பதில்லை.

தூர் வார வேண்டும்: இந்த குளத்தை முழுமையாக, மேடு பள்ளம் இல்லாமல் சமாக தூர்வார வேண்டும். பெருங்குளத்தை நீர்தேக்கமாக அல்லது அணைக்கட்டாக மாற்றினால் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

வறட்சியான புதுக்கோட்டை, வாகைகுளம், செக்காரக்குடி, பேரூரணி, பொட்டலூரணி, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் போன்ற மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதற்கு பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படகு குழாம்: மேலும், இங்கு படகு குழாம் அமைத்து படகு போக்குவரத்து தொடங்கலாம். இதன் மூலம் இப்பகுதியை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முடியும். தொல்லியல் களம், நவத்திருப்பதி மற்றும் நவக்கைலாயம் போன்ற ஆன்மிகத் தலங்கள், இயற்கை அழகு போன்றவை இருப்பதால் சுற்றுலா பயணிகளை எளிதில் கவர முடியும்.

இதனால் இப்பகுதி மக்களின் பொருளாதார நிலை உயர வாய்ப்பு உள்ளது. இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் மட்டுமின்றி, உள்நாட்டு பறவைகளும் சிவகளை பெருங்குளத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.

இந்த பறவைகளை பாதுகாக்க அதிகளவில் மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி ஆலையில் இருந்து வரும் உயர் அழுத்த மின் கம்பியில் அடிபட்டு பறவைகள் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x