Published : 25 Jun 2023 02:00 PM
Last Updated : 25 Jun 2023 02:00 PM

வறட்சியின் பிடியில் நெல்லை மாவட்டம் - அணைகளில் வெறும் 10 சதவீதமே நீர் இருப்பு

திருநெல்வேலி: வறட்சியின் பிடியில் திருநெல்வேலி மாவட்டம் சிக்கியிருக்கிறது. அணைகளில் வெறும் 10 சதவீதமே நீர் இருப்பு உள்ளது. மொத்தமுள்ள 1,097 குளங்களில், 1,040 குளங்கள் வறண்டுள்ளன. அணைகளில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.

பருவமழை பொய்த்திருப்பதால் கார் சாகுபடி கேள்விக் குறியாகி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை காலத்துக்குப் பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை என்பதால் பிரதான அணையான பாபநாசம் அணையில் தண்ணீர் பெருகவில்லை. ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் 57.47 மீ.மீ. மழை பெய்திருந்தது. இது வளமையான மழையளவைவிட 51.25 சதவீதம் கூடுதலாகும், எனினும், நடப்பு ஜூன் மாதத்தில் வெறும் 1.60 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. இது வளமையான மழையளவைவிட 94.59 சதவீதம் குறைவாகும். ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை என்பதால் நீராதாரங்கள் வறண்டு காணப்படுகின்றன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 781 கால்வரத்து குளங்களில் 739 குளங்கள் வறண்டுள்ளன. 42 குளங்களில் ஒரு மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. 316 மானாவாரி குளங்களில் 301 குளங்கள் வறண்டுள்ளன. 15 குளங்களில் ஒரு மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தமாக 1,097 குளங்களில் 1,040 குளங்கள் வறண்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12,882 மில்லியன் கனஅடியாகும். தற்போது 1,342.82 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,691.15 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்தமாக அணைகளில் தற்போது 10.42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில் 28.65 சதவீதம் தண்ணீர் இருந்தது.

6 அணைகளிலும் தற்போதைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்): பாபநாசம்- 37.30அடி (56.75 அடி), சேர்வலாறு- 50.20 (64.47), மணிமுத்தாறு- 52.20 (80.47), வடக்கு பச்சையாறு- 6.75 (21.25 ), நம்பியாறு- 12.49 (12.69), கொடுமுடியாறு- 9 (44). மாவட்டத்தில் 2023 - 2024ம் ஆண்டில் 41,016 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில் கார் பருவத்தில் 12,305 ஹெக்டேர், பிசான பருவத்தில் 27,891 ஹெக்டேர், கோடை பருவத்தில் 820 ஹெக்டேர் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இம்மாதம் வரையில் 1,159 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,148 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றிருந்தது.

இதுபோல் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்து பயிர்கள் என்று அனைத்து பயிர்களின் சாகுபடியிலும் பெருமளவுக்கு சரிவு காணப்படுகிறது. மொத்தமாக மாவட்டத்தில் 55,886 ஹெக்டேரில் அனைத்து பயிர்களின் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய வறட்சியால் இதுவரை வெறும் 3,273 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x