

குன்னூர்: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தின் பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்த சிறுத்தையை கண்டு தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி உலா வருவது சர்வ சாதாரணமாகியுள்ளது. இந்நிலையில், குன்னூர் அருகேசிங்காரா எஸ்டேட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
வனப்பகுதியை கொண்ட பகுதி என்பதாலும், இங்குள்ள பாறையில் அவ்வப்போது சிறுத்தை அமர்ந்து ஓய்வெடுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், இப்பகுதி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை சிறுத்தைகள் அடித்து கொண்டு செல்கின்றன. எனவே, கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.