தன்னார்வலர்கள் முயற்சியால் புத்துயிர் பெற்ற காரைக்குட்டை!

தன்னார்வலர்கள் முயற்சியால் புத்துயிர் பெற்ற காரைக்குட்டை!
Updated on
1 min read

குழாயைத் திறந்தால் குடிநீர் கிடைக்கிறது என்பதால் குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளை நாம் பொருட்படுத்துவதில்லை. ஆக்கிரமிப்புகள், கழிவுகளை கொட்டுதல், கழிவுநீர் கலப்பு, அழகுபடுத்துதல் என்ற பெயரில் பரப்பளவை சுருக்குதல் என்று பல காரணங்களால் நீர்நிலைகள் படிப்படியாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கோவை கீரணத்தம் ஊராட்சியில், பயன்பாடில்லாத நிலைக்குச் சென்ற காரைக்குட்டைக்கு, தன்னார்வலர்கள் இணைந்து மீண்டும் புத்துயிரூட்டியுள்ளனர்.

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், கொண்டையம்பாளையத்தில் (ஒரு பகுதி) நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கீரணத்தம் ஊராட்சிக்கான நீர் ஆதாரமாகவும் இந்த குட்டை உள்ளது. நீர் தேவைக்காக இந்த குட்டையில் மட்டுமே 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சர்க்கார் சாமக்குளத்துக்கான முக்கிய நீர் ஆதாரங்களில் இந்த குட்டையும் ஒன்று. இந்த குட்டை நிறைந்து, வாய்க்கால் வழியாக நீர் சர்க்கார் சாமக்குளத்தை சென்றடையும்.

முன்பு நல்ல நிலையில் இருந்த குட்டை, கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை முற்றிலும் பயன்பாடற்ற நிலைக்குச் சென்றது. கட்டிட கழிவுகள், தனியார் நிறுவன கழிவுகள், கோழிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறியது குட்டை. குப்பையால் குட்டைக்கு நீர்வரும் பாதைகள் மூடப்பட்டன. மழைபெய்தாலும் குட்டைக்குள் நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019-ல் தன்னார்வலர்கள் இணைந்து குட்டைக்குள் இருந்த குப்பை, கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கினர்.

பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) மூலம் முதல்கட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியோடு சுமார் 11 ஏக்கர் பரப்பளவுள்ள காரைக்குட்டையை முழுமையாக தூர்வாரி சீரமைத்துள்ளனர் தன்னார்வலர்கள்.

பருவமழைக்கு தயார்

இதுதொடர்பாக கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யதீஷ் கூறும்போது, “குட்டைக்கான நீர்வழிப்பாதையை சீர்செய்த பிறகு இரண்டு முறை குட்டை நிரம்பியுள்ளது.

நீர்நிலையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில், தற்போது தனியார் நிறுவன பங்களிப்புடன் குட்டையின் பரப்பு முழுவதிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, குட்டையை தூர்வாரி, இயந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குட்டையின் கொள்ளளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

குட்டைக்கு மழை நீர் கொண்டு வரும் இரண்டு ஓடைகளிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு புதர்கள் அகற்றி சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போதுபருவமழைக்கு தயார் நிலையில் குட்டை உள்ளது. பல்லுயிர் பெருக்கத்துக்காக கரைகளை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன”என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in