Published : 21 Jun 2023 04:00 AM
Last Updated : 21 Jun 2023 04:00 AM

கோவை மருதமலை அருகே யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு - காயங்களுடன் உயிர் தப்பிய 3 வயது குழந்தை

கோவை: கோவை மருதமலை அருகே யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். அவரது 3 வயது குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை ஐஓபி காலனி பின்புறம் வனப்பகுதியில், ஸ்ரீ கணபதி நகரைச் சேர்ந்த குமார் (28), மனைவி, 2 குழந்தைகளுடன் நேற்று மாலை விறகு சேகரிக்க சென்றுள்ளார். விறகு சேகரித்துவிட்டு குமாரின் மனைவியும், ஒரு குழந்தையும் முன்னே சென்று விட்டனர். குமார் தனது மகன் அனீஷை (3) ஒரு கையில் ஏந்தி, தலையில் விறகு சுமையை வைத்துக்கொண்டு பின்னால் நடந்து வந்துள்ளார்.

வனப் பகுதியை ஒட்டிய பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நேர் எதிரே வந்த ஒற்றை ஆண் யானை குமாரை தாக்கியது. குமார் தனது மகனை தூக்கி வீசியுள்ளார். தொடர்ந்து குமாரை கால்களாலும், தந்தத்தாலும் யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், வாகனங்களில் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டிவிட்டு குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த குழந்தை அனீஷை வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “உயிரிழந்த குமாரின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பிரேத பரிசோதனை நிறைவடைந்து, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்ற பிறகு ரூ.4.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மருதமலை, அதனை ஒட்டிய பகுதிகளில் எப்போதும் யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க மாலை, இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் நடந்து செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்”என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x