

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆடையூர் குளத்தில் கழிவுநீர் சென்றடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திரு அண்ணாமலையை அக்னி மலை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்ணாமலையின் வெப்பத்தை தணிக்கும் விதமாக, மலையை சுற்றி 365 குளங்களை (தீர்த்தங்கள்) முன்னோர்கள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு குளத்திலும் நீராடி, அண்ணாமலையை வலம் வந்து இறைவனை சிவனடியார்கள் வணங்கியதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
பருவ மழை காலங்களில் குளங்களில் தேங்கும் மழைநீர் மூலமாக, அண்ணாமலையை பாதுகாப்பது மட்டுமின்றி, திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. மெய்ஞானம் மறைக்கப்பட்டு, விஞ்ஞானம் மேலோங்கியதும், மனிதனின் பேராசையால் குளங்கள் அபகரிக்கப் பட்டன. இதன் எதிரொலியாக, சுமார் 80 குளங்கள் மட்டுமே உள்ளன.
நீர்நிலைகளை பாதுகாக்க, உயர்நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, கிரிவலப் பாதையில் உள்ள ஆடையூர் குளத்தை பாழாக்க முயற்சிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “திருவண்ணா மலை கிரிவலப் பாதையில் அபய மண்டபம் அருகே ஆடையூர் குளம் (தீர்த்தம்) உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், இரண்டு வாயில்கள் வழியாக ஆடையூர் குளத்தை நிரம்ப செய்யும். இந்நிலையில், கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது.
இதையொட்டி, கழிவுநீர் கால்வாயும் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கிரிவலப் பாதையில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ஆடையூர் குளத்தின் நுழைவு வாயிலில் முடிவடைகிறது. மழைநீர் தேங்கிய ஆடையூர் குளத்தில் கழிவுநீர் தேங்கி, வரலாற்று சிறப்புமிக்க குளத்தின் தன்மை மாறிவிடும். ஆடையூர் குளத்தில் கழிவுநீர் தேங்கும் போது துர்நாற்றம் வீசும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.
ஆடையூர் குளம் வழியாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். காலப்போக்கில், நிலத்தடி நீரின் தன்மையிலும் மாற்றம் ஏற்படும். நீர்நிலைகளை பாதுகாப்பதில் முனைப்பு காட்டி வரும் தமிழக அரசின் முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போது தான், தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆடையூர் குளத்தில் கழிவுநீர் சென்றடையாமல் தடுத்து, மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.