

மதுரை: தான் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களிடம் நெகிழி (பாலிதீன்) எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகிறார் மதுரை யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மு.ரா.பாரதிதாசன்.
இவர் ‘நம்மைச் சுற்றி லட்சம் மரங்கள்’ என்ற பெயரில் செல்லும் இடமெல்லாம் மரக்கன்றுகளை நடுவதுடன், பொதுமக்களிடம் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். தனிப்பட்ட முறையில், இதுவரை 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
மேலூர் அருகே ஒத்தக்கடையைச் சுற்றியுள்ள நரசிங்கம், கொட்டாட்சி, தெற்காமூர், திருவாதவூர் திருப்புவனம் சாலையில் உள்ள கண்மாய்களில் ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். உலகனேரி அரசினர் மாதிரி பெண்கள் மேனிலைப் பள்ளியில் மூலிகைத் தோட்டம் உருவாக்கியுள்ளார். முக்கம்பட்டி முதியோர் இல்லத்தில் 500 மரங்கள் வரை நட்டுள்ளார்.
சமீபத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பாரதிதாசன், மலைப்பகுதியில் பக்தர்கள் வீசிச் சென்ற நெகிழி கவர் மற்றும் பாட்டில்களை சேகரித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். முன்னதாக, சதுரகிரிக்கு வந்த பக்தர்களிடம் நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பிரச்சாரம் செய்தார்.
இது குறித்து பாரதிதாசன் கூறியதாவது: பல்வேறு வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. மரம் வளர்ப்பு, நெகிழி தவிர்ப்பு உள்ளிட்டவை அவசியமான நடவடிக்கைகள். கடந்த 20 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு வருகிறேன்.
மலைப்பகுதி கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு, நெகிழி பைகளை அங்கேயே வீசிச் செல்கின்றனர். நெகிழி பைகள் மட்காது. மழை பெய்யும்போது மழைநீரை பூமியில் இறங்க விடாது அவை தடுத்து விடும். அதே நேரம், நெகிழி பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்க முடியாது என்றாலும் அவற்றை கட்டுப்படுத்தலாம்.
இயற்கையின் முக்கிய ஆதாரங்களான மலைப்பகுதி, வனப்பகுதி மற்றும் நீர் நிலைகளில் நெகிழி பயன்பாட்டை முழுமையாக தடுக்க வேண்டும். இதனால் சபரிமலை, பழநி, சதுரகிரி உள்ளிட்ட மலைக் கோயில்களுக்கு ஒவ்வொரு முறை செல்லும் போதும் தரிசனம் முடித்து இறங்கும் போதும் பக்தர்கள் விட்டுச் சென்ற நெகிழி கவர்கள், பாட்டில்களை சேகரித்து மறு சுழற்சிக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகிறேன்.
கோயில்கள், பொது நிகழ்வுகள் எங்கு சென்றாலும் நெகிழியால் ஏற்படும் தீமைகள், மரங்கள் நடுவதால் கிடைக்கும் நன்மை குறித்து பிரச்சாரம் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஒத்தக்கடையில் தனது துணிக்கடைக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் வரும் ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்குவதை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார் பாரதிதாசன்.