

பொள்ளாச்சி: தனியார் வணிக வளாக கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலமரத்தை வெட்டுவதை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.
பொள்ளாச்சி - வால்பாறை சாலை கரியாஞ்செட்டிப்பாளையம் பிரிவு, சோமந்துறை சித்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலையோரம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை, தனியார் வணிக வளாக கட்டுமான பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்ட வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறு இல்லாத நிலையில், தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆலமரத்தை வெட்டும் பணி நேற்று நடைபெற்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பசுமை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறும்போது, "அரசிடம் அனுமதி பெற்று வெட்டுவதாகக் கூறி, பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள், மரத்தை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
பொது மக்கள் கூறும்போது, "தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து அப்பகுதியில் இருக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டுக்காக எவ்வாறு வெட்டலாம்? ஒரு புறம் மரக்கன்று நடுவதை அரசு வலியுறுத்துகிறது. மறுபுறம் அதிகாரிகள் மரத்தை வெட்ட அனுமதி அளிக்கின்றனர்.
தனியாருக்கு அதிகாரிகள் துணைபோவது மிகுந்த வேதனை அளிக்கிறது" என்றனர். நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் உசேன் கூறும்போது, "நெடுஞ்சாலை பகுதியில் இருந்ததால் மரத்தை வெட்ட வருவாய் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்" என்றனர். ஆனைமலை வட்டாட்சியர் ரேணுகாதேவி கூறும்போது, "இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரிக்கிறேன்" என்றார்.