

திருவாரூர்: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்கள் கார்பன் நியூட்ரல் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த விழாவில் பேசிய அவர், "ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யும் நெற்பயிர்கள் சுமார் 10 டன் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு வளர்கின்றன.
இதனால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை, கார்பன் நியூட்ரல் மாவட்டங்களாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது என்றார்.
கார்பன் நியூட்ரல் என்றால் என்ன?: கார்பன் நியூட்ரல் என்றால் என்ன என்பது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் கார்பனின் அளவும் சமநிலையில் இருப்பதே கார்பன் சமநிலை (கார்பன் நியூட்ரல்) ஆகும். அந்த வகையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் நெல் வயல்களில் 10 டன் கார்பன் டையாக்சைடு உறிஞ்சப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.