வைகை ஆற்றில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம்: மானாமதுரை மக்கள் வேதனை
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரக் கேடாக உள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளில் 30,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேல் மற்றும் கீழ் கரையில் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் கால்வாய்கள் மூலம் வைகை ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆற்றில் தொடர்ந்து கழிவு நீர் ஓடுகிறது.
ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதி, பூக்காரத் தெரு, ஆர்.சி.தெரு, கொடிக்கால் தெரு, ரயில்வே மேம்பாலம், உயர்மட்ட பாலம் இடையே அதிகளவில் கழிவுநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து கழிவுநீர் விடுவதால் ஆற்றின் நிலத்தடி நீரும் கழிவாக மாறிவிட்டது. இதனால் நகரில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கழிவுநீரே வருகிறது. வெள்ளம் வரும் சமயங்களில் மட்டுமே கழிவுநீர் அடித்து செல்லப்படுகிறது.
இதையடுத்து, 4 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், ஆதனூர் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அங்கு கழிவுநீரை கொண்டு செல்ல திட்டம் தயாரித்தார். ஆனால், அதன்பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆறு மாசடைந்து வரும்நிலையில், அதனை பொதுப்பணித் துறையோ, நகராட்சி நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து ஆற்றுக்குள் கழிவுநீர் செல்லாதபடி கால்வாய்கள் அமைத்து, சுத்திகரிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, கழிவுநீர் ஆற்றில் விடாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.
