

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலுள்ள வன விலங்குகள், தண்ணீர் தேடி ஆழியாறு அணை மற்றும் வால்பாறை, நவமலை உள்ளிட்ட சாலை பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக சாலையோரங்களில் சுற்றித் திரிவதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, வனத்துறை ஊழியர்கள் சுழற்சி முறையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நவமலை செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த யானை கூட்டத்தை, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த யானை ஒன்று, மிகுந்த ஆக்ரோஷத்துடன் பிளிறியபடி ஜோனி எனும் வனத்துறை ஊழியரை தாக்க வந்தது. பின்னர் திரும்பி வனத்துக்குள் சென்றது. தற்போது வனப்பகுதிக்குள் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால், விலங்குகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியேறாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.