

வாணியம்பாடி: வாணியம்பாடி மற்றும் ஆம்பூரையொட்டியுள்ள பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு மட்டுமின்றி வறண்டு கிடக்கும் பெரும்பாலான நீர்நிலைகளில் மணல் மற்றும் மண் அதிக அளவில் கடத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் பகல், இரவு பாராமல் மணல் திருட்டு நடைபெறுகிறது. திருப்பத்தூர், காக்கங்கரை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.
இது போக அரசு அனுமதியில்லாமல் குவாரிகளும் திறக்கப்பட்டு மணல் கடத்தல் ஜரூராக நடப்பதாகவும், காவல் மற்றும் வருவாய்த் துறையினரும் பெயரளவுக்கே சோதனை நடத்துவதாகவும், மணல் மாஃபியாக்களுக்கு அரசு அதிகாரிகளே பச்சைக் கொடி காட்டி வருவதால் இம்மாவட்டத்தில் மணல் திருட்டு தங்கு தடையின்றி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘நீர்நிலைகளில் மணல் மற்றும் மண் கடத்துவதால், நீர்வளம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் மணல் திருட்டை முழுமையாக தடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் அறிவுறுத்துகின்றன. மணல் கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மணல் திருட்டு குறைந்தபாடில்லை.
ஒரு சில அரசு அதிகாரிகளை சரிகட்டும் மணல் மாஃபியாக்கள் மாவட்டம் முழுவதும் தனது தொழிலை விரிவுப்படுத்தியுள்ளனர். மணல் விற்பனையில் கனிசமான வருமானம் கிடைப்பதால், படித்த வேலையில்லாத இளைஞர்கள் கூட தற்போது மணல் திருட்டில் ஈடுபட்டு வருவது வேதனையளிக்க கூடியதாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை, கொடையாஞ்சி, அம்பலூர் போன்ற பாலாற்று பகுதிகளில் மணல் திருட்டு பகிரங்கமாக நடக்கிறது. ஆற்று மணலை பாலாற்றிலேயே ஜலித்து, அதை ஒரே இடத்தில் சேமித்து வைத்து, 25 கிலோ பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டி இரு சக்கர வாகனங்களில் மணல் கடத்தல் கும்பல் சிறு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம், குரிசிலாப்பட்டு, கந்திலி, திருப்பத்தூர் வரை இரு சக்கர வாகனங்களில் ஆற்று மணல் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். இது போக 500-க்கும் அதிகமான மாட்டு வண்டிகளில் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணிக்குள்ளாக ஆற்று மணல் டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதனால், பாலாற்றின் வளம் நாளுக்கு நாள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இரு சக்கர வாகனங்களில் 20 மூட்டை மணல் லோடு எடுத்துச்சென்று விற்பனை செய்தால், தினசரி ரூ.1,500 வரை வருவாய் கிடைப்பதால், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இந்த தொழிலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, குப்பம் போன்ற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படும் மணலுக்கு அதிகமாக பணம் கிடைப்பதால், இங்கிருந்து ஆந்திராவுக்கு மணல் அதிகமாக கடத்தப்படுகிறது.
வாணியம்பாடி, ஆம்பூர் வருவாய் மற்றும்காவல் துறையினர், பொதுப்பணித்துறையினர் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இது தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தாலும், அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
பாலாற்று பகுதி மட்டும் இல்லாமல் வறண்ட நீர்நிலைகளில் தொடர்ச்சியாக மணல் மற்றும் மண் கடத்தப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இது மட்டுமின்றி திருப்பத்தூர், காக்கங்கரை போன்ற பகுதிகளில் செயற்கை மணல் விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதைஎல்லாம் அரசு அதிகாரிகள் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியைஒட்டியுள்ள பாலாற்று பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்புக்குழு ரோந்துப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டும் வருகின்றனர். செயற்கை மணல் தயாரிப்பு இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரு சக்கர வாகனங்களில் மணல் கடத்துவது குறித்து பொதுமக்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.