

மதுரை: இன்றைய உயர் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் வேளாண் பணிகளுக்காக கால்நடைகள் பயன்பாடு குறைந்து பால் உற்பத்திக்காக மட்டுமே கறவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. சுமை தூக்குவோர், கட்டுமானத் தொழில் போன்ற கூலி வேலைளுக்கு செல்லும் அடித்தட்டு மக்கள், வயதான பிறகும் அதுபோன்ற கடினமான வேலைகளுக்குச் செல்ல முடியாது. அதனால், 2 கறவை மாடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கி விடுகின்றனர். விளைநிலங்கள் வீட்டு மனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளாக மாறியதால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துவிட்டது.
மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததால் தீவனங்கள் சரியாக கிடைக்காமல் மாடுகள் சாலையோரக் குப்பையோடு கிடக்கும் உணவுகளைச் சாப்பிடுகின்றன. தற்போது குப்பைகளில் பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருப்பதால் மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சாப்பிட்டு மரணமடைவதும், உயிருக்குப் போராடுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மாடுகளின் வயிற்றில் இருந்து அடிக்கடி கால்நடை மருத்துவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அறுவைசிகிச்சை செய்து அப்புறப்படுத்துவது அதிகரித்து வருகிறது. மதுரை உணவுக்கும், சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருப்பதால் நட்சத்திர உணவகங்கள், நடுத்தர உணவகங்கள், சாலையோர உணவகங்கள் அதிகம். தமிழகத்தின் பிற நகரங்களுக்கு வட்டச் சாலை, புறவழிச்சாலை, நான்குவழிச் சாலையில் செல்லக்கூடியவர்கள்கூட உணவுக்காக மதுரை நகருக்குள் வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.
அதனால், தினமும் நகர்ப்புறச் சாலைகளில் உணவுக்கழிவுகள் இலை தழைகளோடும், பிளாஸ்டிக், பாலித்தீன் கவர்களோடும் அதிகம் கொட்டப்படுகின்றன. முறையாக அப்புறப்படுத்தப்படாத இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உணவுகளுடன் சேர்த்து மாடுகள் சாப்பிடுவதால் தமிழகத்திலேயே மதுரையில்தான் அதிகளவு கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மரணமடைவதாகவும், பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக செரிமானப் பிரச்சினைகளுக்காக மாவட்ட தலைமை அரசு கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள் கொண்டுவரப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து மதுரை தல்லாகுளம் பன்முக கால்நடை மருத்துவமனையின் பிரதம மருத்துவர் டாக்டர் வீராசாமி கூறியதாவது: பொட்டல உணவுகளை பிளாஸ்டிக் கவர்களுடன் வீசும் மனித தவறுகளாலேதான் மாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நாய் போன்ற மற்ற விலங்குகள் உணவுக் கழிவுகளுடன் பிளாஸ்டிக்கை சாப்பிடாது. அவை பிளாஸ்டிக்கை பற்களாலும், கால்களாலும் கிழித்து எறிந்துவிட்டு தேவையானதை மட்டும் சாப்பிட்டுகின்றன.
ஆனால், மாடுகள் உணவுப்பொருட்களின் வாசனையால் கவரப்பட்டு குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேர்த்து உட்கொள்கின்றன. பிளாஸ்டிக் கவர்களில் சாப்பாடு வாங்கும்போது ஒவ்வொரு குழம்பு, பொறியல்கள், உணவுக்கும் தனித்தனி பொட்டலம் கட்டி வாங்குகிறார்கள். பொட்டல உணவுகளை முழுமையாகச் சாப்பிடுவதில்லை. பிளாஸ்டிக் பொட்டலம், பாலித்தீன் கவர்களுடன் குப்பைத் தொட்டிகளில் வீசுகிறார்கள். அரசு எத்தனை கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவே இல்லை.
மாடுகளுக்கு ருமென், ரெடிகுலம், ஒமசம்,அபோசம் ஆகிய நான்கு வயிறுகள் உள்ளன. ருமென் எனப்படும் முதல் குடல் அளவில் பெரியதாகவும், அசைபோடும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. செரிமானமாகும். உணவு அடுத்தடுத்த வயிறுகளுக்குச் சென்று வெளியேற்றப்படுகிறது. மனிதர்களைப் போல் செரிமான சக்தி மாடுகளுக்கு கிடையாது.
அவை முதலில் கிடைக்கிற உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக்குள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. பிறகு, அவை ஓய்வெடுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டே அந்த உணவை மீண்டும் வயிற்றுக்கு கொண்டு வந்து அசைபோட்டு தேவையானதைச் சாப்பிட்டு செரிமானமடையச் செய்கின்றன. தேவையில்லாததை சாணத்தோடு வெளியேற்றிவிடுகின்றன. வெளியேற முடியாத பெரிய பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் வயிற்றுக்குள் சேர்ந்து மாடுகளுக்குச் சாப்பிட முடியாதநிலை ஏற்படுகிறது, ’’ என்றார்.