எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கம் | மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பசுமைத் தாயகம்  முறையீடு

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கம் | மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பசுமைத் தாயகம்  முறையீடு
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.734 கோடியே 91 லட்ச ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக 60 முதல் 100 ஆண்டுகள் பழமையான 600 மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் ஆஜராகி அவசர முறையீடு செய்தார்.

ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அப்பகுதியில் உள்ள 600 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவற்றில் சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாப தெற்கு ரயில்வே, எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in