Published : 12 Jun 2023 04:03 AM
Last Updated : 12 Jun 2023 04:03 AM
பொள்ளாச்சி: வால்பாறை செல்லும் சாலையில் ஆழியாறு அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்தை யொட்டி அமைந்துள்ள ஆழியாறு அணையைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் உணவு தேடி சுற்றித்திரியும் யானைக் கூட்டம் கோடை காலங்களில் தண்ணீர் அருந்துவதற்காக அணைப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீரோடைகள் வறண்டு உள்ளதால், கடந்த சில நாட்களாக கவியருவி பகுதி மற்றும் நவமலை செல்லும் வழித் தடங்களில் யானைகள் கூட்டமாக தண்ணீர் அருந்த ஆழியாறு அணைக்கு வந்து செல்கின்றன.
3 குட்டிகளுடன் யானை கூட்டம் அணைப் பகுதியில் மாலை நேரங்களில் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியாறு அணைக்கு யானைகள் கூட்டமாக செல்லும் போது, ஆர்வக்கோளாறில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யானைகளின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT