

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 கிராமங்களில் மரகத பூஞ்சோலை தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கும்மனூர், எண்ணேகொள், தானம்பட்டி, மாரம்பட்டி மற்றும் ஆவலக்கம்பட்டி ஆகிய 5 கிராமங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், பசுமை தமிழ்நாடு திட்டம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் சுமார் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன.
இக்கோட்டத்தில் போலுப்பள்ளி, கூசுமலை, பேரண்டப் பள்ளி, மாதேப்பள்ளி, நாக தொணை மற்றும் பையனப்பள்ளி ஆகிய மத்திய நாற்றங்கால்களில் சந்தனம், சிவப்பு சந்தனம், மகோகனி, வேங்கை, ஈட்டி, தேக்கு, சில்வர்ஒக், மலைவேம்பு, பூவரசன், பலா, புளியன், ஜம்பு நாவல், வேம்பு, புங்கன், அத்தி, அரசன், பாதாம், நீர்மத்தி, கொய்யா, மாதுளை, எலுமிச்சை மற்றும் நெல்லி ஆகிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளன.
இக்கோட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பணிகளால் Forest Survey of India 2019 -ன் படி காப்புக்காட்டுக்கு வெளியே 68.41 சதுர கி.மீ பசுமை போர்வை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், கோயில்கள், தொழிற்சாலை வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு நிலங்கள், நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் நடவு செய்து கொடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இக்கோட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளரை 87782 94739 மற்றும் 94428 25159 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.