நாமக்கல் | சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்: பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
நாமக்கல்: சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடுவதால் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் ஏராளமான சாயஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது.
இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், அதை பயன்படுத்தும் மக்களும் பல்வேறு உடல் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். தவிர, மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களும் செத்து மடியும் நிலையும் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதைக்கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி பெறாத சாய ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தல், ஆலைகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர். எனினும், இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிறு சாயப்பட்டறைகள் சங்க தலைவர் ஜி.கே.பிரபாகரன் கூறியதாவது: சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காண பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சூழலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கை சலவை செய்யும் சிறு சாயப்பட்டறைகளை குறி வைத்து இடித்து வருகின்றனர். இது வருத்தத்திற்குரியது. இதுபோல் சிறு சாயப்பட்டறைகளை இடித்தால் நகரில் விசைத்தறி பட்டறைகளுக்கு தேவையான நூல்கள் சாயமிட முடியாத நிலை ஏற்படும். ஜவுளி உற்பத்தியும் பாதிக்கும்.
எனவே சிறு சாயப்பட்டறைகளை குறி வைக்காமல் இயந்திரங்களை வைத்துக் கொண்டு சுத்திகரிப்பு செய்யாமல் சாயக் கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
