Published : 10 Jun 2023 06:10 AM
Last Updated : 10 Jun 2023 06:10 AM
சென்னை: விருகம்பாக்கம் கால்வாய் நெற்குன்றம் அருகே உருவாகிறது. சுமார் 6.3 கிமீ நீளமுள்ள இக்கால்வாய், கோயம்பேடு, அரும்பாக்கம், சூளைமேடு பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று கூவம் ஆற்றில் கலக்கிறது. இக்கால்வாய் செல்லும் பகுதிகளில் பல இடங்களில் சர்வசாதாரணமாக குப்பைகள் கொட்டப்படுகின்றன.
பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஓட்டல்கள், விடுதிகள், சாலையோரக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் கழிவுகளும், இறைச்சிக் கடைகளின் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயின் நீரோட்டம் பாதிக்கப்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதிகளில் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது.
இதுகுறித்து சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அர்ச்சனா கூறும்போது, “இந்த கால்வாயில் மழைக்காலத்தில் மட்டுமே தூர்வாரப்படுகிறது. இதனால் துர்நாற்றம், கொசுத் தொல்லை போன்ற சுகாதாரக் கேடுகளால் பெரிதும் அவதிப்படுகிறோம். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை" என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வாகனங்களில் வருவோர்விருகம்பாக்கம் கால்வாயில் குப்பையைவீசிவிட்டு செல்கிறார்கள். இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட கால்வாயின் சாலையோரப் பகுதிகளில் இரும்புவேலி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதனால் வாகனங்களில் வந்து குப்பை வீசிவிட்டு செல்வதைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், குடியிருப்புகளில் இருந்து குப்பை வீசுவதைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அபராதம் விதித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருகம்பாக்கம் கால்வாய் மட்டுமல்ல இதர கால்வாய்கள், கூவம், அடையாறு போன்ற ஆறுகளிலும் குப்பை கொட்டப்படுவதை அரசு போர்க்கால அடிப்படையில் தடுத்தாக வேண்டும். அதற்கு குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல குப்பையை கால்வாய்கள், ஆறுகளில் கொட்டுவதால் ஏற்படும்சுகாதார சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT