

மதுரை: மதுரை மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு மழைக்கு விழுந்த மரங்கள்கூட அகற்றப்படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது.
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 5.5 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. 1999-ம் ஆண்டில் பூங்கா திறக்கப்பட்டபோது மக்கள் அதிகளவு வந்தனர். பல்வகை மரங்கள், பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், அவற்றின் சத்தத்தின் நடுவே பூங்காவுக்குள் நுழைந்தால் அடர் வனத்துக்குள் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தும். தினமும் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்தப் பூங்கா செயல்படுகிறது.
குழந்தைகளை மகிழ்விக்க கதிர் ஒளிக்காட்சி (லேசர் ஷோ), இசை நீரூற்று கள் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவில் வாகனங்களின் உபகரணக் கழிவைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்த பறவைகள், விலங்குகள் சிற்பங்கள் ரசிக்க வைத்தன. நகரில் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக இந்தப் பூங்கா உள்ளது.
மதுரையில் தங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், காலையில் இந்த பூங்காவில்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த அளவுக்கு முன் மாதிரி பூங்காவாகத் திகழ்ந்தது. ‘கரோனா’ தொற்றுக்குப் பிறகு இந்தப் பூங்கா பராமரிப்பை மாநகராட்சி கைவிட்டது. பூங்காவில் இருந்த இருக்கைகள் உடைந்து அமருவதற்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கழிப்பறைகள் சுகாதார மற்ற நிலையில் உள்ளன.
பழைய வாகன உதிரி பாகங்களை கொண்டு தயார் செய்து பூங்காவில் வைக்கப்பட்ட பறவைகள், விலங்குகள் சிற்பங்கள் உடைந்துபோய் உள்ளன. அதன் கூர்மையான உலோக முனைகள், ஓடி விளையாடும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
பூங்காவில் பொதுமக்கள், குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைந்ததால் பூங்காவுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துவிட்டது. அதனால், பூங்காவை சரியான நேரத்தில் ஊழியர்கள் திறப்பதில்லை.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்: கடந்த கோடைமழைக்குப் பூங்காவில் இருந்த ஏராளமான மரங்கள் பட்டுப்போய் விழுந்தன. அந்த மரக்கிளைகளை அகற்ற வில்லை. நடைபாதைகள் அருகே பூங்கா வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை முறையாக வெட்டிச் சீரமைக்காததால் அவையும் புதர்மண்டி கிடக்கின்றன.
மரக்கிளைகள் காய்ந்து சருகாகிக் கிடக்கின்றன. அந்தப் புதருக்குள் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. நடைபாதைகள் ஆங்காங்கே உடைந்து அவை சீரமைக்கப்படாமல் உள்ளன. அதனால், நடைப்பயிற்சிக்காக பூங்காவுக்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
மரங்கள் விழுந்த இடங்களில் மீண்டும் மரக்கன்றுகள் வைக்க மாநகராட்சி நட வடிக்கை எடுக்காததால், மரங்கள் இல்லாத பூங்கா வளாகம் வெட்டவெளியாக உள்ளது. இதேநிலை பூங்கா முழுமைக்கும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி மேயர், ஆணையர் பூங்காவில் மரங்கள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகள் வைத்துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவையே மதுரை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்க முன்வராத பட்சத்தில் நகரில் உள்ள மற்ற பூங்காக்களின் நிலை பரிதாபம்தான்.