

ந
கரத்தில் வாழ்ந்தாலும், பசுமையைப் பார்க்காமல் நம்மால் வாழ முடிவதில்லை. ஃபிளாட், மாடி வீடு என்றாலும்கூட நான்கு தொட்டிகளில் பிடித்த செடிகளை வளர்ப்பது பலருடைய பொழுதுபோக்கு. எங்கள் வீட்டிலும் சில தொட்டிச் செடிகள் உண்டு. ஒரு நாள் மாலையில் அந்தச் செடிகளைக் கடந்து சென்றபோது, விநோதமான ஒரு சிறு பூச்சி அங்கே உலாவிக் கொண்டிருந்தது.
மரகதப் பச்சை நிறத்தில் கொசுவைவிட சற்று பெரியதாகவும், ஈயைவிட சற்று சிறியதாகவும் அதன் உருவம் இருந்தது. என்ன பூச்சியாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
ஆங்கிலத்தில் இவற்றுக்கு Long legged Fly என்று பெயர். சாதாரண ஈக்களைவிட நீண்ட கால்களைப் பெற்றிருப்பதால் இந்தப் பெயர். தமிழிலும் அதை அடியொற்றி ‘நெட்டைக்கால் ஈக்கள்’ என்றழைக்கப்படுகிறது. டோலிகோபோடிடே (Dolichopodidae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.
பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும் இந்த ஈக்களின் கண்களும் பச்சை நிறம் கொண்டவை. நாடெங்கும் தென்படும் இந்தப் பூச்சித் தோட்டங்களில் இலைகளின் மீது தனியாக பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். இது தன்னைவிட சிறிய பூச்சிகளை இரையாகக்கொள்ளும். இரையின் உடலில் இருக்கும் சாற்றை உறிஞ்சி இது வாழ்கிறது.
சிறு வயதில் பொன்வண்டை பிடித்து விளையாடியிருக்கா விட்டாலும், குறைந்தபட்சம் பார்த்தாவது இருப்போம். அந்த வண்டு சட்டென்று நம்மைக் கவர்வதற்கு முக்கியக் காரணம் அதன் மரகதப் பச்சை நிறம். இந்த ஈயும் அதே நிறம்தான்.
சூரிய ஒளியில் இதன் பச்சை நிற உடல் தகதகவென்று மின்னும்போது, இந்த ஈக்களின் அழகை ரசிக்கலாம்.